பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அக்கறை உண்டாகவில்லை. ஒரு பருப்பும் சாப்பிடாமல்தான் கருமை மின்னுகிறதே அவன் உடம்பு! இத்தனை வயதுக்குமேல் பாதாம் பருப்பா அவன் உடம்பை வெளுத்துவிடப் போகிறது? அவன்தான் பெரியவேதாந்தியாயிற்றே! பாதாம் பருப்புப் பொட்டலம் எப்படியிருக்கிறது என்றுகூடப் பாராமல் அப்படியே கொண்டுபோய்ச் சுவாமிகளுக்கு முன்னால் வைத்தான்.

சுவாமிகள் பொட்டலத்தைப் பிரித்து வலதுகை எட்டி எடுக்க முடிந்த மாதிரிப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இன்னும் ஒரு சம்புடத்தைத் திறந்து வேறு ஒரு காகிதத்தில் கொஞ்சம் சீனாக் கல்கண்டும் எடுத்து வைத்துக்கொண்டார். பிரமநாயகம் ஒரு மூலையில் சுவரோரமாக நின்று கொண்டிருந்தான். சுவரில் சாய்ந்த மாதிரியும் சாயாததுபோலும் பொத்தின மாதிரி நின்றான் அவன். பட்டும் படாமலும் இருப்பதுதானே அவன் பழக்கம். அவன்தான் பெரிய வேதாந்தியாயிற்றே!

சுவாமிகள் கல்கண்டும், பாதாம் பருப்பும் எடுத்துச் சுவைத்துக்கொண்டே வேதாந்தப் புத்தகத்தில் மூழ்கினார். அந்தச் சமயத்தில்,

“நமஸ்காரம்!” என்று குரல் வந்தது. தர்மானந்த சரஸ்வதி நிமிர்ந்தார்.அதே ஊரில் பக்கத்துத் தெருவிலிலுள்ள மற்றொரு மடமான அறுபத்து மூவர் மடத்தைச் சேர்ந்த குட்டித் தம்பிரான் ஒருவர் வந்து கொண்டிருந்தார். ;தனிமையின் சுகத்தில் ஐந்து நிமிஷத்துக்கொரு கையாகப் பாதாம் பருப்பும், கல்கண்டும் சாப்பிட்டுக் கொண்டே வேதாந்தத்தில் மூழ்க விடாதபடி, இவன் வந்துவிட்டானே!’ என்று குட்டித் தம்பிரான்மேல் உள்ளூறக் கோபித்துக்கொண்டே, "நமஸ்காரம் வரணும் வரணும்! ஏது இவ்வளவு தூரம்?” என்று இனிக்க இனிக்க வரவேற்றார் தர்மானந்தர்.

"திருமேனி பாங்குதானே?” என்று நலம் விசாரித்துக் கொண்டே எதிரே உட்கார்ந்து கொண்டார் குட்டித் தம்பிரான். அவர் பார்வை தர்மானந்தருக்குப் பக்கத்தில் இருந்த பாதாம் பருப்பு, சீனாக் கல்கண்டு காகிதங்களின் மேல் சென்றது. சென்ற அளவில் நிற்கவில்லை.

“என்னது? பாதாம் பருப்பா? நல்ல பருப்பாத் தேடி வாங்கிருக்கேளே?” என்று வெட்கத்தைத் துறந்த வெளிப்படைக் கேள்வியாகவும் எழுந்தது. கேள்வியில் ஆசை தொக்கி நின்றது.

"நானென்ன கண்டேன்? இதோ நிற்கிறானே பிரமநாயகம், இவன்தான் வாங்கிக் கொண்டுவந்தான்.நல்ல பருப்பு,கெட்டபருப்பு-என்று கண்டோமா? வெளியே உலக நடமாட்டம் இருந்தால் அல்லவோ அதெல்லாம் தெரியும்” என்று சிரித்தபடி பதில் சொன்னார் தர்மானந்தர்.பதில்தான் சொன்னாரே தவிர, இந்தாருங்கள்! சாப்பிட்டுப் பாருங்கள்! என்று அந்தக் குட்டித்தம்பிரானிடம் ஒரு பருப்பும் எடுத்து நீட்டவில்லை. குட்டித் தம்பிரான் வெட்கத்தை விட்டுக் கேட்டது பெரிய அநாகரிகம் என்றால் தர்மானந்தர் ஒரு பருப்பாவது உபசாரத்துக்கும் தராமலிருந்தது அதைவிடப் பெரிய அநாகரிகமாகத் தோன்றியது. ஆனால் 'பிரமநாயகம் பயல்’ இந்த அநாகரிகத்தை எல்லாம் கவனித்தும் கவனிக்காததுபோல் சுவரோரமாக அசையாமல் நின்று கொண்டிருந்தான்.