பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மடத்தில் நடந்தது 467

குட்டித் தம்பிரானின் கண்களும் பாதாம் பருப்பு - கல்கண்டு பிரதேசத்திலிருந்து மீளவில்லை."நீங்களும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிடுங்களேன்” என்று தர்மானந்தரும் சொல்கிற வழியாயில்லை. விநாடிகள் ஆயின.

“சிவஞான போதத்திலே ஒரு சந்தேகம்; சுவாமிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு போகலாம்னு வந்தேன்” என்று குட்டித் தம்பிரான் பேச்சை ஆரம்பித்தார்.

“ஆகா பேஷாகக் கேளுங்கோ, சொல்றேன். என்ன சந்தேகம்?”

பாதாம் பருப்பு - கல்கண்டைத் தவிர எதைக் கேட்டாலும் கொடுத்துவிட அவர் தயார் குட்டித் தம்பிரான் கேட்டார்:

“ஐம்பொறியின் நீங்கான் நீர்ப்பாசி போல் நீங்குமலகன்மம் வரின் நீங்கானை நீங்கும் நினைந்து இதுக்கு விளக்கும் தெரியணும்.”

“அற்புதமான இடத்தைத்தான் கேட்கிறீர்கள். நீரிற்பாசி பரந்திருக்கிறது. ஒரு கல்லை விட்டெறிந்தால் பாசி நீங்கி அவ்விடத்தில் நீர் தெளிந்து தெரியும். அதுபோல் சிவனுடைய சார்பு பட்ட இடத்தில் பாசம் நீங்கித் தெளிவு பிறக்கும். இப்போது விளங்குகிறதோ, இல்லையா? மனிஷாளுக்குச் சிவ சம்பந்தம் கிடைச்சப்புறம் மனசிலே ஆசை பாசமெல்லாம் நீங்கிப் போயிடணும்.”

“என்ன அழகாச் சொல்லியிருக்கார் பார்த்தேளா!”

“இது ஒண்ணு விளங்கிட்டால் லோகமே ஷேமமாயிருக்கும்”

எது?”

“ருசிகள் அடங்கிடணும். மனசு துல்லியமாகச் சின்ன நினைவுகளே இல்லாமே இருக்கணும்.”

இரண்டு பேரும் நெடுநேரம் வேதாந்த விசாரத்திலே ஈடுபட்டிருந்தனர்.இடையில், "இதோ வரேன். இருக்கோ” என்று கூறி விட்டுத் தர்மானந்தர் எதற்கோ உட்பக்கம் எழுந்து போனார். அந்தச் சமயத்தில் குட்டித் தம்பிரான் அவசர அவசரமாக ஒரு காரியம் பண்ணினார். காகிதத்திலிருந்து பத்துப் பன்னிரண்டுபாதாம் பருப்பை அள்ளி மடியில் கட்டிக் கொண்டார். பின்னால் சுவரோரமாகப் பிரமநாயகம் நிற்பதையே அவர் கவனிக்கவில்லை. பிரமநாயகம் இந்த அசிங்கத்தைப் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிட்டான். அவன்தான், பெரிய வேதாந்தியாயிற்றே!

தர்மானந்தம் திரும்பி வந்தார். மீண்டும் இருவருக்குமிடையே வேதாந்த சர்ச்சை ஆரம்பமாகிச் சிறிது நேரம் நடந்தது. சிறிது நேரத்திற்குப் பின் தற்செயலாகப் பாதாம்பருப்பில் திரும்பிய தர்மானந்தரின் பார்வையில் சந்தேக நிழல் படிந்தது. காகிதத்தை எடுத்துப் பருப்புகளை எண்ணினார் அவர். அடுத்த கணம் பிரம நாயகத்தைப் பார்த்துச் சீறினார்.