பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“ஏண்டா நாயே! எத்தனை நாளா இப்படிப் பண்ணுகிறாய்? அரைச் சேர் வாங்கினால் முப்பது பருப்புக்குக் குறையாமே இருக்குமே? இன்னிக்குக் கால் சேரா வாங்கிட்டு இரண்டனாக் கமிஷன் அடிச்சியா? என்னை ஏமாத்திடலாம்னு நினைச்சியா? எத்தனை நாள் எண்ணிப் பார்த்திருக்கிறேன் தெரியுமா? இவ்வளவு நிலுவைக்கு இத்தனை பருப்பு இருக்கும்னு எனக்கு அத்துப்படி”

பிரமநாயகம் குட்டித் தம்பிரான் பக்கம் பார்த்தான். அவர் பேச்சு மூச்சுக் காட்டவில்லை. குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்தார்.

“என்னடா திருட்டு முழி முழிக்கிறே?” தர்மானந்தர் பிரமநாயகத்தை மேலும் விரட்டினார்.

வெறும் பாமரனாகிய அந்த வேலைக்காரனின் கருப்பு உடம்பில் சிவப்பு இரத்தம் சூடேறி ஓடியது. முன்னால் பாய்ந்து கல்லடி மங்கனாக உட்கார்ந்திருக்கும் அந்த குட்டித் தம்பிரானின் மடியை அவிழ்த்துக் காட்டிவிடலாம் போல் அவன் கைகள் துடித்தன. செய்திருக்கலாம்; செய்தால் அவனுடைய நேர்மையை நிரூபித்திருக்க முடியும்.

"திருட்டு நாய்! என் முன் நிற்காதே! தொலைந்து போ” என்று தர்மானந்தர் மேலும் இரைந்தார்.பிரமநாயகம் பார்த்தான். குட்டித் தம்பிரானின் விழிகள் அவனை நோக்கிப் பரிதாபமாகக் கெஞ்சின.

‘என் மானத்தை வாங்கிவிடாதே’ என்பதுபோல் இறைஞ்சின அந்தக் கண்கள். பார்க்கப் போனால் தர்மானந்த சரஸ்வதி, குட்டித் தம்பிரான், இரண்டு பேரையும்விடப் பிரமநாயகம் வயது மூத்தவன். பெரிய சம்சாரி, அவர்களை விட உலகில் அவன் வாழ்ந்து சலித்தவன். அவனுக்கு வேதாந்தம் தெரியாது. ஆனால் மனித நாகரிகம் தெரியும். அவனுக்குச் சிவஞான போதம் தெரியாது. ஆனால் விட்டுக் கொடுக்கத் தெரியும். காரணம்! அவன் நிஜமாகவே பெரிய வேதாந்தி. “இன்னும் ஏண்டா, நிற்கிறாய்? பெரிய வேதாந்தி” தர்மானந்தர் இரைகிறார். அந்தக் குற்றத்தைத் தான் செய்யவில்லை என்று சொல்லாமல், தானே செய்ததாக ஒப்புக் கொண்டதுபோல் தலை குனிந்தபடி வெளியேறினான் பிரமநாயகம். அவன்தான் பெரிய வேதாந்தியாயிற்றே! அவனுக்கு எதிலும் ருசி கிடையாது. பிறர் குற்றவாளி என்று நிரூபிக்க முனையும் நியாயமான முனைப்பில்கூடத்தான்! தான் குற்றவாளியில்லை என்று காட்ட முயலும் விருப்பில் கூடத்தான்.

அவன் செளகரியங்களால், செளகரியங்களுக்காக வேதாந்தியானவனில்லை. ஏழ்மையால் வேதாந்தியானவன்.வீட்டுக்குப் போய்ப்பெரிய சம்சாரத்தைப் பற்றி இனி எப்படிப்பிழைப்பது? என்று கவலைப்படவேண்டிய வேதாந்தி அவன், ஆம் நிஜமான வேதாந்தி.

(தாமரை,மார்ச் 1961)