பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

470 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வைத்துக் காலில் செருப்பு மாட்டிக் கழற்றுவதிலிருந்து, பில் போடுவது, பணம் வாங்குவது, கணக்கு எழுதுவது, எல்லாம் குமரகுருதான். சில சமயங்களில் கூட்டமில்லாதிருக்கும்போது, நாலைந்து ஜோடிக்குப் பாலிஷ் போட்டு 'ஷோகேஸில்' அடுக்குவதும் உண்டு. செருப்புக் கடையில் வேலை பார்க்கிறவனுக்கு எது உயர்வு? எது தாழ்வு? எல்லாமே உயர்வுதான்!

பெரிய முதலாளி காலமான பின் சின்னவர் சலீம் கடைப்பக்கமே அதிகமாக வருவதில்லை. கடையைத் திறப்பதிலிருந்து இரவில் சாவிக்கொத்தும் விற்பனைப் பணமும் கொண்டு போய்க் கொடுப்பதுவரை எல்லாம் குமரகுருதான் பார்த்துக் கொண்டான். சின்னவர் உல்லாச புருஷர், ரோட்டரி கிளப், டென்னிஸ் கிளப், காஸ்மாபாலிடன் கிளப் என்று ஊரிலுள்ள நவநாகரிக கிளப்புகளில் எல்லாம் சலீமுக்குத் தொடர்பு உண்டு. சலீம் வியாபாரத்தைக் கவனிப்பதற்காகத் தினசரி கடைக்கு வராவிட்டாலும் அந்த வழியாகக் காரில் போகிறபோது வருகிறபோது ‘போர்டு' பளிச் சென்று இருக்கிறதா என்பதை நோட்டம் பார்க்கத் தவறமாட்டார். போர்டு பளிச்சென்று இராவிட்டால் அவருக்குக் கோபம் வரும்.

சலீம்பத்து நாளைக்கொருதரம் திடுதிடுப்பென்று நாலைந்து ஆங்கிலோ இந்தியப் பெண்களுடன் காரில் வந்து இறங்குவார். சிரிப்பும், கும்மாளமுமாகக் கடையே அமளி துமளிப்படும். எல்லார் கால்களுக்கும் புதிய செருப்புக்கள் மாட்டப்படும். முதலாளி சலீம் கடைசியில் குமரகுருவைத் தனியே அழைத்து, “குமரகுரு இதோ பாரு. இவங்கள்ளாம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. இதுக்கெல்லாம் பில் போடாதே. பிரஸன்டேஷன் மாதிரி இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு, வந்ததுபோலவே அவர்களைக் காரில் அடைத்துக் கொண்டு திரும்பவும் கிளம்பிவிடுவார்.

அப்புறம் குமரகுரு ஏன் வாய் திறக்கிறான்? தோலோடு பழகிப் பழகி ரொம்ப விஷயங்களில் மரத்துப் போயிருந்தான் அவன். இவ்வளவெல்லாம் தாராளமாக இருக்கிற அதே சலீமிடம் தன் கால்களுக்கு இனாமாக ஒரு ஜோடி செருப்புக் கேட்கப் பயந்து கூசினான் குமரகுரு. நவநாகரிகமான உயர்தரச் செருப்புக்களைப் பளபளவென்று மின்னுகிறார் போல வரிசையாக அடுக்கியிருக்கிற அந்தக் கடையில் வேலை பார்க்கும் அவன் அணிந்து கொண்டிருந்த செருப்போ மிகவும் சாதாரணமானது. கருங்கல்லைப் போல் கனத்தோடு கோணல் மாணலாக அறுத்துத் தைத்திருந்த பழைய டயர் செருப்புக்களை வீதியில் மாட்டிக் கொண்டிருந்தான் குமரகுரு. ஆனால் நாள் தங்கி உழைக்கும் சக்தி அவற்றுக்கு உண்டு.

அந்தச் செருப்புக்களை அவன் கால்களில் அணிந்து கொண்டிருக்கும்போது பார்த்தாலும் அழகாயிராது. கழற்றிய பின்பு தனியாகப் பார்த்தாலோ அழகாயிராததோடு அசிங்கமாகவும் இருக்கும்.

ஒருநாள் கடைக்குள் நுழைகிற இடத்தில் அதைக் கழற்றி வைத்துவிட்டுச் சலீமிடம் அவன் பட்டபாடு போதும் போதும் என்றாகிவிட்டது.

“ஏண்டா குமரு, இதென்ன செருப்பா, பாறைக் கல்லு உடைச்சு வச்சிருக்கியா? இதை இங்கே கழட்டிவச்சுக் கடைக்குத் திருஷ்டி கழிக்கவாணாம். மறைவா எங்காவது