பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / செருப்பு 471

தூக்கி எறி” என்று சலீம் கூறியதிலிருந்து அந்தச் செருப்புக்களைக் கழற்றி முன்புறம் வைப்பதை நிறுத்திவிட்டுக் கடையின் பின்புறம் பழைய சாமான்களைக் குப்பைப் போல அடைத்திருக்கும் ஒரிடத்தில் போட்டுவிட்டு, போகும்போது நினைவாகக் காலில் மாட்டிக் கொண்டு போகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் குமரகுரு.

சலீமுக்கு எல்லாம் 'பளிச்' சென்றிருக்க வேண்டும். 'பளிச்' சென்றிருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும்.குமரகுருவுக்கும் 'பளிச்' சென்றிருக்க ஆசைதான்! ஆனால் 'இப்ராஹிம் ஷூ மார்ட்'டில் கிடைக்கிற நாற்பத்தைந்து ரூபாய்க் காசில் பளிச்சென்றிருக்க முடியுமா? இப்ராஹிம் ஷு மார்ட்டைப் பளிச்சென்று வைத்துக்கொள்ள அவனால் முடியும். அது வேறு விஷயம்; ஆனால் தன்னைப் பளிச்சென்று வைத்துக் கொள்ளப் போதுமான பொருளாதார வசதி அவனுக்கு இல்லை.

அந்தக் கடையிலிருக்கிற உயர்தரச் செருப்புக்களில் ஒரு ஜோடி ஒசியாகக் கிடைத்தால் குமரகுருவும் பளிச்சென்று இருக்கலாம். ஆனால் அப்படி ஒசிச் செருப்பு ஏற்கனவே 'பளிச்' சென்று இருக்கிறவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்ததே தவிர, அவனைப்போல் இனிமேல் பளிச்சென்று இருக்க விரும்புகிறவனுக்குக் கிடைக்கிற வழியாயில்லை. தானாக வாய் திறந்து கேட்க அவனுக்கும் தெம்பில்லை. எனவே நவநாகரிக ஷு மார்ட்டாகிய இப்ராஹீம் ஷு மார்ட்டில் வேலை பார்த்துக் கொண்டு கரடு முரடான டயர்ச் செருப்பில் நடந்து கொண்டிருந்தான் அவன். அதுதான் சொன்னேனே தோலோடு பழகிப் பழகி ரொம்ப விஷயங்களில் அவன் மரத்துப் போயிருந்தான்.

அந்தக் கிளப்பிலும் இந்தக் கிளப்பிலும் பழகிய யுவதிகளோடு சலீம் கடைக்கு வந்து அட்டகாசம் செய்யும்போது குமரகுருவுக்குச் சில சமயங்களில் அவமானமாக இருக்கும். ஆனால் அவன் அந்த அவமானங்களை மறந்துவிடப் பழகிக் கொண்டிருந்தான்.

சலீம் தான் உடனழைத்து வரும் பெண்களை உட்காரச் செய்துவிட்டுக் குமரகுருவை நோக்கி, “ஏண்டா அசடு மாதிரி நிற்கிறே? இவங்க காலுக்கு 'மாட்ச்' ஆகிய மாதிரி ஜோடியாகப் பார்த்து எடுத்து மாட்டு” என்று அதட்டுவான்.

இளம் பெண்களுக்கு முன்னால் கண்டபடி பேசினால் அவருக்கும் ரோஷமாகத்தானே இருக்கும்? அதுவும் குமரகுரு கலியாணமாகாத வாலிபன், கலியாணத்தைப் பற்றிக் கற்பனைகள் செய்திருக்கும் மனநிலையுள்ள பருவத்தினன். சுரணையற்ற தோலுக்குத்தானே தோற்கடையில் மதிப்பு? குமரகுருவும்.அப்படித்தான். ஆகியிருந்தான்.ஆனால் சமயாசமயங்களில் 'தானும் மனிதன் தனக்கும் மனம், மானம் எல்லாம் இருக்கிறது' என்பது அவனுக்கு நினைவு வந்து தொலைத்தது. அப்படி நினைவு வரும்போதெல்லாம் அந்த நினைவைக் கஷ்டப்பட்டு அடக்க முயன்று கொண்டிருந்தான் குமரகுரு பளிச்சென்று வாழமுடியாவிட்டாலும் பசியைத் தீர்த்துக் கொண்டாவது வாழ வேண்டுமே! இந்த வேலையை விட்டுவிட்டால் வயிறும் அல்லவா காயும்? அழுக்கு வேஷ்டியும் காலர் கிழிந்த சட்டையும், பழைய டயர்ச்