பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

செருப்பும், எந்த விதத்திலும் கேவலமில்லை. ஆனால் அதை யாராவது கேவலமென்று சொல்லிக் காட்ட முன்வருகிறபோது வேதனையை உணரவேண்டியிருக்கிறது. 'கேவலம்தானோ' - என்று சந்தேகமும் ஏற்படுகிறது.

தன்னோடு கடைக்கு வருகிற இளம் பெண்களிடமெல்லாம். ஏதோ வேடிக்கையாகப் பேசுவதுபோல், “நம் குமரு ஒரு ஜோடி செருப்பு வைத்திருக்கிறான்! அதைப் பார்த்தீர்களோ? உங்களுக்குச் செருப்புப் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆசையே போய்விடும்” என்று சலீம் தன்னைச் சுட்டிக்காட்டிச் சிரித்துக்கொண்டே கூறும்போது குமரகுரு குன்றிப்போவான்.வேடிக்கையாகப் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது சலீம் தன்னுடைய டயர்ச் செருப்பைப் பேச்சுக்கு விஷயமாக எடுத்துக்கொண்டு வம்புக்கு இழுப்பது ஏன்?' என்று புரியாமல் தவித்தான் குமரகுரு.

‘விடாமல் இப்படிச் சொல்லிச் சொல்லிக் கேலி செய்கிறாரே? இவர்தான் கடையிலிருந்து ஒரு ஜோடி.நல்ல செருப்பு எடுத்து பிரஸண்ட் செய்யட்டுமே!’ என்று நினைப்பான் குமரகுரு. ஆனால் கேட்கத் துணிவு வராது. ஆனாலும் என்றாவது ஒருநாள் சலீமிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு அதன் பயனையும் தான் அடைந்துவிடலாம் என்று நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்தது. எத்தனையோ பேருக்கு ஒசிச் செருப்பு வழங்கிய உல்லாசப் பேர்வழி தனக்கு ஒரு ஜோடி அன்பளிப்பாக நல்ல செருப்புத் தரத் தயங்கமாட்டார் என்று எண்ணினான் அவன்.

குமரகுரு எதிர்பார்த்த சந்தர்ப்பம் விரைவில் வாய்த்தது. அன்று சலீம் தன் ஜமாவோடு கடைக்குள் நுழைந்தபோது இரண்டாவது முறையாகக் குமரகுரு வாசற்புறம் தவறிப்போய்க் கழற்றி வைத்திருந்த டயர்ச் செருப்பு அவன் பார்வையில் தென்பட்டுவிட்டது; அவ்வளவுதான். வந்தது வினை!

“ஏண்டா இதை நீ இன்னும் இங்கே தான் கழற்றி வைக்கிறாயா? உனக்கு எத்தினி நாள் படித்துப் படித்துச் சொல்லுறது? சொல்லிப் பிரயோசனமில்லே. இதோ இப்படிச் செய்தாத்தான் உனக்குப் புத்தி வரும்’ என்று சொல்லிக் கொண்டே டயர்ச் செருப்புக்களை நடுத்தெருவில் போய் விழும்படி தன் காலால் "புட்பால்’ உதைப்பது போல் எற்றிவிட்டான் சலீம், குமரகுருவுக்கு இது அவமானமாயிருந்தாலும் ஒருவிதத்தில் திருப்தியாயிருந்தது.

'இதுதான் சரியான சமயம்! இன்றைக்கு இவரிடம் கேட்டு விட வேண்டியது தான்' என்ற எண்ணத்துடன் “நான் இனிமேல் டயர்ச் செருப்புப் பக்கமே போகவில்லை. எனக்கு ஒரு ஜோடி நல்லதாச் செருப்புக் கடையிலிருந்தே கொடுத்து விடுங்கள்” என்று கேட்டுவிடத் தயாரானான் குமரகுரு.

தான் வாய் திறந்து கேட்டால் உல்லாசப் பேர்வழியான முதலாளி மறுக்கமாட்டாரென்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன். வாய் திறந்து கேட்டும் அவர் மறுத்துவிட்டால் அவமானமாயிருக்குமே என்றும் தயங்கினான். அப்படி அவர் தரமறுத்துவிட்டால் மேலே என்ன செய்யலாம் என்றும் அவன் யோசித்தான். "நீயுமாச்சு, உன் கடையுமாச்சு, நீயே உன் கடையைக் கட்டிக் கொண்டு அழு” என்று