பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி செருப்பு 473

சொல்லிவிட்டு அப்படியே தெருவில் போய் அங்கே விழுந்து கிடக்கும் தன் டயர்ச் செருப்புக்களை மாட்டிக் கொண்டு நடந்து விடலாமா என்று சிறுபிள்ளைத் துடிப்போடு ஒரு யோசனை குமரகுருவுக்கு உதயமாயிற்று.

அப்படிச் செய்தால்தான் என்ன?

வேறென்ன? வேலை போகும்; வயிறு காயும்? வயிறு காயட்டுமே! வேலை போகட்டுமே! ஒரு நிமிஷம் ரோஷத்தோடு, மானத்தோடு துணிவோடு வாழ்ந்திருக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைக்குமே?

கடைசியில் குமரகுரு துணிந்து கேட்டேவிட்டான்.

"நீங்கள்தான் ஒரு ஜோடி நல்ல செருப்பாக எனக்குப் பிரஸண்ட் செய்யுங்களேன் முதலாளி”

“பிரஸண்ட் செய்கிற முகரையைப் பார் முகரையை; உனக்கு அது ஒரு கேடா” என்று அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான பதில் சலீமிடமிருந்து வந்தது. சலீமுக்குத்தான் 'பிரஸண்ட்' செய்கிற ஆள் உள்பட எல்லாமே பளிச்சென்று இருக்கவேண்டுமே!

குமரகுரு அதிர்ந்து போனான். 'யோசனைப்படி இப்போதே இந்த வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதான் என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுதிப்பட்டது. ஒரு கணம் தயங்கினான்.முதலில் செருப்பை எடுத்துக்கொண்டு வந்து அப்புறம் பேசிக் கொள்ளலாமென்று தோன்றியது. எப்படியானால் என்ன? குமரகுருவுக்குத் துணிச்சல் உண்டாகிவிட்டது. இத்தனை நாட்களாகத் தன்னை அவமானப்படுத்தி வாட்டி எடுத்திருக்கும் முதலாளி சலீமைச் சரியானபடி காய்ச்சி எடுக்க அவனுக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது! கடைக்குள்ளிருந்து வேகமாக நடந்து தெருவுக்கு வந்தான் குமரகுரு. அங்கொன்னும் இங்கொன்றுமாக, விழுந்திருந்த டயர்ச் செருப்புக்களைக் கால்களில் மாட்டிக் கொண்டு திரும்பினான். சலீமின் அதிகாரக் குரல் அவனை அழைத்தது.

“டேய் குமரு! அந்த 'ஐசுவரியம்' தெருவிலே கிடந்தா எவனும் கொண்டு போயிடமாட்டான். உள்ளே கொண்டு போய் எறிஞ்சிட்டு இங்கே வா. வந்து இவங்க காலுக்கு 'சப்பல்ஸ் எடு”

குமரகுரு மறுபேச்சுப் பேசாமல் கடைக்குள் புகுந்து செருப்பை வழக்கம்போல் உட்புறம் குப்பைக் குவியலுக்கருகே கழற்றி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்திருப்பவர்களின் காலுக்கு அளவான செருப்புக்களைத் தேடி எடுக்கலானான். அவனுடைய கொதிப்பு அந்த ஒரு கணத்தில் எப்படியோ அடங்கிவிட்டது. சலீமை எதிர்த்துக் கேட்க ஏனோ அவனுக்கு நாழ எழவில்லை."எதிர்த்துக் கேட்கலாம்’ என்று நினைப்பது சுலபமாக இருந்தது. கேட்பதற்கு மட்டும் முடியவில்லை. ஏதோ நாவைத் தடுத்தது. ஏதோ தொண்டையைக் கட்டுப்படுத்தியது. சொல்ல வரவில்லை. சீற்றமும் வரவில்லை. சுரணையில்லாத தோலோடு பழகிப் பழகி அவன் ரொம்ப விஷயங்களில் மரத்துப் போயிருந்தான்.

(தாமரை, ஜூன், 1961)