பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63. கார்கால மயக்கம்

றைக்கு உள்ளே எழுத்து, கற்பனை, படிப்பு எதுவுமே ஓடாத நேரத்தில் வெளிவாசல் வராந்தாவிற்கு வந்து ஒரு நோக்கமும் இல்லாமல் குறுக்கும் நெடுக்கும் நடக்கிற பல சந்தர்ப்பங்களில் எம்.எஸ்.எக்ஸ், 07423 என்ற எண்ணுள்ள இந்தச் சிறிய காரை அழகிய யுவதி ஒருத்தி தனியாக டிரைவ் செய்து கொண்டு போவதை நான் பார்த்திருக்கிறேன்.

‘நம்பர் முதற்கொண்டு குறிப்பாகப் பார்த்திருக்கிறீர்களே?’ என்று நீங்கள் பூடகமாக உள்ளர்த்தம் மறைத்துச் சிரிப்பது புரிகிறது. தற்செயலாகப் பார்த்தல் - என்பதையே தொடர்ந்து செய்கிற போது நோக்கமில்லாமலே ஒரு நோக்கம் வந்து விடுகிறது. ‘நான் விடமாட்டேன், விடமாட்டேன்’ என்று தானாகக் கண்ணிலும், மனத்திலும் வந்து பதிந்து தெலைக்கும் விஷயத்தை எப்படி உதற முடிகிறது? இந்த எம்.எஸ். எக்ஸ் 07423 விஷயமும் இப்படித் தற்செயலாக மனத்தில் இடம் பிடித்துப் பின்பு நாளாவட்டத்தில் தன்னைத்தானே ஸ்திரப்படுத்திக் கொண்டதுதான். இதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் எந்த முயற்சியும் செய்ததில்லை. நினைவு வைத்துக் கொள்ள எனக்கு வேறு எத்தனையோ விஷயங்கள்.

ஏதோ ஒரு தினத்தில் காலை ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள்ளே சரியாக இன்ன நேரம் என்று சொல்ல முடியாத ஏதோ ஒரு நேரத்தில் சாலையின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம் நோக்கி இந்த மோகினி எம்.எஸ்.எக்ஸ் 07423ஐச் செலுத்திக் கொண்டு போனதை முதல் தடவையாக நான் பார்த்தேன். நடப்பதற்கு ‘சான்ஸே’ இல்லாமல் கூண்டில் வைத்து இழுத்துக் கொண்டு போகப்படுகிற சர்க்கஸ் மிருகம் போலக் காரில் போகிறவர்களைக் கண்டாலே எனக்கு அனுதாபம் உண்டாகும். -

இரட்டைப் பின்னலில் இரண்டு புறமும் நிரந்து தொங்கும் மல்லிகைச்சரம். இந்த முகத்தின் கவர்ச்சி எப்படிப்பட்டதென்று சொல்ல முடியா விட்டாலும் கவர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டமாகச் சொல்லி விடத் தகுந்த முகம். நீல அலையில் கயல் போலப் புரளும் கண்கள். ரோஜா மொட்டு இதழ்கள். ஊதுபத்திப் புகைச் சுருளைப் போலக் காதோரத்தில் சுருண்ட கூந்தல் இழைகள். ஸ்டியரிங் பற்றியிருக்கும் கைகளில் ஒன்றில் சிறிய பொற்கடிகாரம். மற்றொன்றிலே இரண்டு பொன் வளைகள். ஏதோ ஒரு நிறத்தில் வாயில் புடவை. அது எந்த நிறத்தினதாயிருந்தாலும், இவளுக்கு அழகாகத்தான் இருக்கும். சுபத்திரை, கைகேசி போன்ற பெண்கள் தேரோட்டியதாக இதிகாசங்களில் வருகிறதே, அந்தச் சமயங்களில் அவர்கள் எவ்வளவு அழகாயிருந்திருப்பார்கள் என்பதை இந்த எம்.எஸ்.எக்ஸ்.07423