பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / கார்கால மயக்கம் ★ 475



ஐச் சாரத்யம் செய்து கொண்டு போகும் பெண்ணின் நினைவில் இருந்து கற்பனை செய்து கொள்வேன் நான். நோஞ்சானாகித் துவள்கிற மனத்துக்கு இந்தக் கற்பனை ஒரு ‘டானிக்’ மாதிரியில்லையா? கதைக்கும், நாவலுக்கும், தேவையான கற்பனைகள் ஓடாத காலத்தில் மனத்தின் வறட்சியைப் போக்கிக் கொள்ளவாவது இப்படி மோகன நினைவுகளில் மூழ்குவது உண்டு. அறைக்குள் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். இருந்தாற்போலிருந்து எழுதுவதைச் சிறிது நேரத்துக்கு நிறுத்திவிட்டு வேறு ஏதாவது செய்தாலென்ன என்று மனம் இன்னொன்றிலே தாவிவிடும்.

எப்போதாவது சில சமயங்களில் எதுவும் செய்யாமலிருப்பதுகூட எல்லாம் செய்ததைவிடச் சுறுசுறுப்பான ஒரு செயலாகத் தோன்றும். அப்படித் தோன்றும் சமயங்களில்தான் மற்ற நேரங்களில் என்னைக் கவர முடியாத விஷயங்களால் நான் கவரப்படுவேன்.

எம்.எஸ்.எக்ஸ் 07423ம் இதன் ஸ்டியரிங்கைப் பற்றியிருக்கும் பொன்நிறக் கைகளும், அவற்றுக்குரிய இளமையின் மோகன விழிகளும், அந்த விழிகளிலேயே பிறந்து அவற்றின் எல்லையிலே தேங்கும் நளினமும் என்னைக் கவர்ந்ததும் இப்படிப்பட்டதொரு நேரத்தில்தான். பலவீனமான நேரமா அது?

மெடிகல் காலேஜில் டாக்டருக்குப் படிக்கிற பெண் என்று தெருவில் யாரோ பேசிக் கொண்டது காதில் விழுந்தது.அதற்குமேல் அதிகமாக ஒன்றும் தெரியவில்லை.

கார்காலம் ஆரம்பிக்கும் பருவம். ஒருநாள் மழை இலேசாகத் துாறிக் கொண்டிருந்தது. எங்கோ போவதற்காகப் பையும் கையுமாக வாசல்வரை வந்தவன், போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றேன். தெற்கேயிருந்து வந்து கொண்டிருந்த எம்.எஸ்.எக்ஸ், 07423 மோகினி அங்கிருந்தே நான் நிற்கிற நிலையைப் பார்த்துக்கொண்டே வந்திருக்கிறாள் போலிருக்கிறது.

சர்ர்ரென்று எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது எம்.எஸ்.எக்ஸ் 07423. "ஏறிக்கொள்ளுங்கள் சார்!நான் கொண்டு போய் விட்டுவிடுகிறேன்” என்று சிரித்துக் கொண்டே இவள் பின்புறம் திரும்பி உள் ஸீட்டுக்கான கதவைத் திறந்துவிட்டாள். நான் சில கணங்கள் தயங்கி நின்றேன். உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் என்னுடைய கொள்கைகள் நினைவுக்கு வந்தன. நான் ஒரு எழுத்தாளன் - முற்போக்கு இதயங்கொண்ட எழுத்தாளன். எவ்வளவு வசதிகள் பெருகினாலும் வாழ்க்கையின் பங்குதாரனாக இருக்க வேண்டுமே தவிர, விஸிட்டராகப் பார்வையாளனாக இருக்கக்கூடாதென்று நினைக்கிறவன். கொஞ்சம் மார்க்ஸிய சித்தாந்த வழிபாடும் உண்டு. தெருவின்,இருபுறமும் தோன்றி மறையும் நலிவையும்,பொலிவையும் சேர்த்தே பார்த்துச் சிந்தித்துக் கொண்டே நடந்து செல்ல ஆசைப்படுகிறவன். காரில் சென்று சென்று, நடப்பதற்கே பொறுமையற்றுப் போய்விட்ட என் நண்பர்களைப் பார்த்து அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கிறவன். சந்து பொந்துகளிலும் நாசுக்கான பேர்வழிகள் நடப்பதற்குக் கூசுகிற பாதைகளிலும்கூட வாழ்க்கை கூசாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்காமல் விலகிப் போவதுதான் அநாகரிகம்