பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“அப்படியானால் நீ பேசாமல் படுத்திரு, தம்பி! இதோ நான் கஞ்சி போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிழவி கிளம்பினார்.

மறுபடியும் எனக்கு நினைவு வந்து நான் கண் விழித்தபோது, “பாட்டி அவரை எழுப்பேன் பாட்டி! பாவம். எப்போ சாப்பிட்டு விட்டுப் போனதோ?” குயிற் குரல் காதுகளில் விழவே, இரண்டு தடுக்காகப் பிரித்திருந்த எனது அறையின் சமையற்கட்டுப் பக்கமாகப் பார்வையை ஒட்டினேன்.

அந்த மங்கிய சிமினி விளக்கின் ஒளியில் சமையற்கட்டு வாசலில் அவள் நின்று கொண்டிருந்த தோற்றம் இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதுதான் இந்தத் தழும்பைப் போலவே ஒரு அழியாத சித்திர்க் காவியமாக என் நெஞ்சில் எழுதப்பட்டு விட்டதே! நினைவு மறக்குமா?

தழையத் தழையக் கட்டிக் கொண்டிருந்த நீலச் சிற்றாடை பருவத்துக்குத் தகுந்த உயரம். மலர்ந்த முகம். குறுகுறுவென்று சிரிப்பது போலவே பார்க்கும் கண்கள். அடுப்பில் காரியம் செய்திருந்ததனால் கலைந்து ஒரங்களில் சுருண்டு சுருண்டு காதுக் குண்டலங்களோடு சுழலும் சுரி குழல். கடைந்தெடுத்தது போன்ற நாசி. அதில் மகிழம் பூவைப் பதித்தது போல ஒரு மூக்குத்தி. ரோஜா இதழ்கள் மூடித் திறக்கும்போதே சிறுநகை புரிவது போன்ற நளினம் செறிந்த இதழ்கள்.தலையில் தாழம்பூவை அடுக்கிப் பின்னிக் கொண்டிருந்தாள்.

‘நல்லவன், ஒரு வம்பு தும்புக்குப் போகமாட்டான்’ என்ற நம்பிக்கையினாலோ என்னவோ, முத்துப்பாட்டி தன் பேத்தியின் பணிவிடையைத் தொடர்ந்து அந்த ஐந்து நாட்களும் எனக்கு அளித்திருந்தாள். முதலில் இரண்டொருநாள் பாட்டியும் கூடவே வந்தாள். பின் ‘அவளே’ தனியாக வந்து போகத் தலைப்பட்டாள்.

ஜூரம் விட்டு நான் எழுந்த பிறகும்கூட எங்கள் தொடர்பு நீடித்தது. இறுதியில் எங்களது அந்தத் தொடர்பு இதயத்தின் தொடர்பாகப் பரிணமித்தது.

வெள்ளை நெஞ்சம் படைத்த முத்துப்பாட்டியும் எங்கள் பழக்கத்தைப் பற்றி எந்த விதமான குறையும் பட்டுக்கொள்ளவில்லை. காரணம், எங்களது இதயத்தில் மலர்ந்த காதல் அப்படிக் குறைப்பட்டுக் கொள்ளும்படியான எந்தக் களங்கத்துக்கும் இடம் கொடுக்கும்படியானதாக இல்லாமல் இருந்ததுதான்.

அந்த ஊரில் நல்ல நிலபுலன்களும் மதிப்பிடத்தக்க சொத்தும் உள்ளவள் முத்துப்பாட்டி அவளது ஒரே மகள் தலைப் பிரசவத்தில் கோமதியை அவளிடம் ஒப்படைத்துவிட்டுக் கண்களை மூடிவிட்டாள். கோமதியின் தந்தையும் அதிக நாள் - அவள் மழலையைக் கேட்கும் வயசு வரை கூட இருக்கவில்லையாம் - இவ்வளவு விவரங்களையும் அவள் வாயைக் கிண்டியே கேட்டு அறிந்து கொண்டிருந்தேன் நான். “நமக்கும் கோமதிக்கும்பிறப்பு வளர்ப்பில் அதிக வித்தியாசமில்லை. நம்முடைய மாமா அவ்வளவாகச் சொத்துக்காரர் இல்லை.கோமதியின்பாட்டிகொஞ்சம் சொத்துக்காரி. இவ்வளவுதான் வித்தியாசம்” என்று எண்ணிக் கொள்வேன்.