பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / கார்கால மயக்கம் 479

எம்.எஸ்.எக்ஸ் 07423ன் வரவை எதிர்பார்க்கிறேன். 'நடந்து போக வேண்டும்' என்று எண்ணுவதற்கே சோம்பலாயிருக்கிறது. ‘கார் வந்துவிடும்' என்று நினைக்க முடிகிறதே தவிர, 'நடந்து போய் விடலாமே' என்று நினைக்க வரவில்லை. எவ்வளவு பெரிய ஆபத்தான நிலை இது? நினைப்பதற்கே சோம்பல்.

அதோ! தெற்கேயிருந்து வேலைக்காரப் பையன் ஒருவன் மழையில் நனைந்துகொண்டு ஓடிவருகிறான். என் வீட்டுப் படியேறுகிறான். சொல்கிறான்.

“சுமதி அம்மா இன்னிக்குக் காலேஜுக்குப் போகலியாம். அவங்களுக்கு ஜூரம். உங்க கிட்டச் சொல்லிடணும்னாங்க."

இவள் எதற்காகச் சொல்லி அனுப்பியிருக்கிறாள் என்பது புரிகிறது. இலேசாக என் மனத்தின் ஒரு மூலையிலிருந்து கோபம்கூட வருகிறது. யார்மேல் யார் கோபப்படுவது? எதற்காகக் கோபப்படுவது? எனக்கே புரியவில்லை. 'எம்.எஸ்.எக்ஸ். 07423ல் பத்து நாள் சவாரி செய்ததிலேயே நான் இவ்வளவு பெரிய சோம்பேறியாக மாறிவிட்டேனே' என்பதை நினைத்தபோதுதான் 'வீக்' ஆகிப் போன இடம் எனக்குப் புரிகிறது. செயலைச் செய்வதற்குச் சோம்பல் படுகிற நிலை உலகத்தில் பலருக்கு உள்ளதுதான். ஆனால், நினைப்பதற்கே, சோம்பல் படுகிற நிலை மிகவும் பயங்கரமானது.

மீண்டும் வீட்டுக்கு உள்ளே போகிறேன். குடையை எடுத்துக்கொண்டு வருகிறேன், நடக்கிறேன், நடப்பது என்பதே அகெளரவமான காரியம்போல ஒரு மயக்கம் உண்டாகிறது. சமாளித்துக் கொண்டு மேலே நடக்கிறேன். பழைய தைரியம், பழைய திமிர், பழைய சிங்கநடை எல்லாம் மெல்ல மெல்ல என்னை வந்தடைகின்றன. இந்தத் திமிர் பத்து நாட்களாகவே எங்க போயிருந்தது?’ என்று நினைத்து மலைக்கிறேன். மறுபடியும் சமாளிக்கிறேன்.

என்னுடைய அந்தப் பழைய நடை - தெருவையே அம்பு துளைக்கிற மாதிரி துளைத்துக் கொண்டு பாய்கிற நடை எழுத்திலுள்ள 'ப்ரொக்ரஸிவ் ஸ்டைல்’ போன்ற நடை - இப்போது எனக்கு வருகிறது. திரும்ப வருகிறது.

பாய்ந்தடித்து அதிவேகமாகப் போகிற செளகயரிங்களில் ஒட்டிக் கொண்டு நினைவை மந்தமாக்கித் தவிப்பதைவிட மெதுவாகப் போகிற அசெளகரியத்துடன் விரைவாகச் சிந்திக்கிற சாதனை இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். கடந்த பத்து நாட்களாக எப்படி இந்த நினைவை மறந்திருந்தேன்?

கார்காலத்தின் பன்னிரண்டாம் நாள். எம்.எஸ்.எக்ஸ்.07423ன் ஒசை வாசலில் கேட்கிறது. "சார் ரொம்ப மன்னிக்கணும். நேற்று நீங்கள் கஷ்டப்பட்டிருப்பீங்க." இவள் குரல் கெஞ்சுகிறது.

நான் இவள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறேன். பின்பு நிதானமான குரலில் சொல்கிறேன்: "சுமதி நான் உன்னை மன்னிக்க வேண்டிய குற்றத்தைத்தான் நீ செய்திருக்கிறாய். அதாவது என்னை நடப்பது பற்றி நினைக்கவும் சோம்பல்!