பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64. பிட்டுத் தோப்பு

வையையாற்றுப் பாலத்தைக் கடந்து இரயில் மதுரைக்குள் நுழைகிற போது நீங்கள் வண்டி போகிற திசையை நோக்கி உட்கார்ந்திருந்தால் - வலது கைப்பக்கம் ஆற்றின் தெற்குக் கரையில் பாலத்துக்குச் சிறிது தொலைவு மேற்கே அடர்த்தியாகத் தென்னை மரங்கள் தெரியும். கரையிலிருந்து ஆற்றுப் பரப்பை நோக்கி ஒட்டைச் சிவிங்கி போல் நீட்டி வளைத்துக் கொண்டு வையையில் புதைந்து கிடக்கிற எந்த இரகசியத்தையோ மேலேயிருந்து தேடுவது போல் தோன்றும். இந்தத் தென்னை மரங்களில் மனத்தைப் பறி கொடுக்கவில்லையானால் எதற்குமே மனத்தைக் கொடுத்து ஈடுபடத் தெரியாதவர் என்றுதான் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கும்.

கண்ணுக்கினிய இந்தத் தென்னை மரக் கூட்டத்துக்குத்தான் மாதத்திற்கொரு திருவிழாவுடைய எங்கள் மதுரை மாநகரத்தில் பிட்டுத் தோப்பு என்று பெயர். இது என்ன பெயர்? பிட்டாவது தோப்பாவது? - என்று நீங்கள் முகத்தைச் சுளித்துக் கொண்டு முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. போனால் போகிறதென்று பழைய சங்கதிகளைக் கொஞ்சம் படித்து வைத்திருந்தால் இதெல்லாம் தெரியும்! புதியதைப் படிப்பதற்கே நேரமில்லாதபோது பழையதைப் படிக்க உமக்கு நேரமேது? சொல்கிறேன், கேளும்.

ஆலவாய் நகராகிய மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அறுபத்து நாலு திருவிளையாடல்கள் செய்து மகிழ்ந்தாரே, அவற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் என்பதும் ஒன்று. அந்தக் கதையை எப்போதாவது பள்ளிக்கூடத்துப் பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்; அல்லது படிக்காமலும் விட்டிருப்பீர். அதைப் பற்றிய கவலையை ஏற்கெனவே உமக்குப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராயிருந்த துர்ப்பாக்கியசாலி பட்டிருப்பாராதலால் நான் மேலே இந்தக் கதையைத் தொடர்கிறேன். ‘வந்தி’ என்னும் ஏழைக் கிழவிக்காகச் சிவபெருமானே பிட்டுக்கு மண் சுமக்கும் கூலியாய் வந்து வையை வெள்ளத்தை அடைக்கிற வேலையைச் சரியாய்ச் செய்யாமல் பாண்டியனிடம் பிரம்படி பட்ட இடம் ஐயா இது!

அந்தக் காலத்தைப் போல் இப்போதெல்லாம் வையையில் அவ்வளவு பெரிய வெள்ளம் வராத காரணத்தாலோ என்னவோ, நகரசபைக்காரர்கள் சாக்கடையைக் கலக்க விட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோமசுந்தரப் பெருமானுக்கு வாரிசாக இருந்து இந்த மட்டிலாவது திருவிளையாடல்களைப் புரிந்து கொண்டு வருகிறவர்களைப் பாராட்ட வேண்டாமா? பிரம்படி கொடுப்பதற்குப் பாண்டிய வமிசத்தில் யாரும் இப்போது இல்லாததால் வெறும் பாராட்டோடு விட்டு விடுவோம்.


நா. பா. I - 31