பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இங்கே நம்முடைய கதை நடக்கிற இந்தக் காலத்தில் திருவிளையாடற் புராணத்து மகிமைகள் ஒன்றும் பிட்டுத் தோப்பிலோ, அதன் கீழேயுள்ள வையை மணற்பரப்பிலோ இல்லை என்பது சர்வ நிச்சயம். தோப்பை ஒட்டினாற்போல அக்கம்பக்கத்தில் கிடுகு வைத்து மறைக்கப்பட்ட குஸ்திப் பள்ளிக்கூடங்கள் இரண்டு மூன்று உண்டு. அப்பால் மில் கூலிகளின் நெருக்கடி நிறைந்த வீதிகள். இந்தப் பக்கம் தோப்புக்குக் கீழே ஆற்றில் தேங்கி ஓடாத நீருடன் ஒடு கால்களும், பூர்வீகத்தில் தார் டிரம்மாக இருந்து இப்போது மணலில் உறையாக இறக்கப்பட்ட ஊற்றுப் பதிவுகளும், தோய்ப்பதற்காகப் போடப்பட்ட பட்டைக் கற்களுமாகத் தினசரி குளிக்க வருகிறவர்கள் கண்டு கண்டு அலுத்துப் போனதொரு காட்சி தெரிந்து கொண்டிருக்கிறது. நேர் எதிர்க்கரையில் வடக்கே மயானத்தைத் தவிர விசேஷமாக ஒன்றும் இல்லை. தத்தனேரி என்று சொன்னால் திருவிளையாடற் பட்டணத்து வாசிகளுக்குச் சாவைத் தவிர வேறு ஒன்றும் நினைவு வரப் போவதில்லை. இந்த இடத்தில் பிட்டுத் தோப்புக்கும் வடக்குக் கரைக்கும் நடுவே ஆற்றுக்குள் ஒடுகால்கள் அதிகமாக இருந்ததற்குத் தொழில் இரகசியம்தான் காரணம். வெள்ளம் என்கிற அதிசய நிகழ்ச்சி வையையில் ஏற்படாத காலங்களில் மயானத்துக்குப் போகிற 'கார்டு லைன்' ஆக இருந்ததனால் செத்தவரைச் சூழ்ந்து சென்ற சாவார்கள் திரும்பி வந்து முழுக்குப் போட்டுவிட்டுப் போக ஏற்றதாக இருந்தது இந்தப்பகுதி முழுகுகிறவர்களை நம்பி ஒடுகால்காரர்கள் முழுகாமல் தொழில் நடத்த ஏற்ற இடம் இது.

எனவேதான் சாகிறவர்களையும், அவர்களுக்குப்பின்னால் போய் விட்டுச் சாவுத் தீட்டோடு திரும்புகிறவர்களையும் நம்பி நம்முடைய கதாநாயகனாகிய பரமசிவம் பிட்டுத் தோப்புக்கு அருகே ஒர் ஒடுகால் வெட்டிக் கொண்டு ஊற்றிலே நீரும், வயிற்றிலே பசியும் ஊற உட்கார்ந்தான்.

பரமசிவத்தின் ஒடுகாலைப் பற்றிக் கொஞ்சம் வர்ணிக்கலாமா? வர்ணிப்பதற்கு அதில் அற்புதங்கள் ஒன்றும் இல்லையென்றாலும் 'ஒன்றுமில்லை'யென்பதையே வர்ணனைக்கு விஷயமாக்கிக் கொள்ள முடியும்தானே? 'வரம்பெலாம் முத்தம் மடையெலாம் சங்கம்' என்று கவிராயர்கள் உயர்வு நவிற்சி பண்ணுகிறமாதிரிப் பரமசிவத்தின் ஒடுகாலில் பெரிய அம்சங்கள் ஏதும் கிடையாது . ஒடுகால் தோண்டிக் குவித்த மணல் மேட்டில் வெயிலுக்கு நிழல் தர ஒரு குடிசை பரமசிவத்தின் கொலு மண்டபமும் அதுதான். குடிசையின் நான்கு புறமும் துருத்திக் கொண்டிருக்கும் மூங்கில் நுனியில் எப்போதும் யாருடைய ஈர வேஷ்டியாவது காய்ந்து கொண்டிருக்கும். பரமசிவத்தின் கொலு மண்டபத்துக்குள் கள்ளிப் பலகையினாலான ஒரு பெட்டியில் சவுக்காரம், சாம்பிள் சைஸ் வாசனைச் சோப்பு, சீயக்காய்த் தூள் பொட்டலம், எண்ணெய், பல்பொடி எல்லாம் விற்பனைக்காக உண்டு வருகிறவர்களின் பொது உபயோகத்துக்காகத் தேசீய மயமாக்கப்பட்ட சீப்பு ஒன்றும், தண்ணீர் பட்டுப் பட்டு இரசமழிந்த கண்ணாடியும் இலவச விநியோகத்துக்குரிய விபூதி, குங்குமமும் அந்தக் கொலு மண்டபத்தில் உண்டு. தேமல் விழுந்த தோல் மாதிரி இடையிடையே இரசமழிந்த அந்தக் கண்ணாடியில்