பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பிட்டுத் தோப்பு 483

பார்ப்பதால் முகத்துக்கு ஏற்படுகிற விகாரத்தைப் பழகினவர்கள் சமாளிக்க முடியும். இவ்வளவுக்கும் மேல் ஒரு மூலையில் குடிதண்ணீருக்காகப் பானை டம்ளரும் உண்டு. ஒடுகால் தண்ணீரைக்குடிக்க முடியாதா என்று நீங்கள் சந்தேகப்படலாம். டாக்டர்கள் சில மருந்துகளை உடலின் வெளிப்புற உபயோகத்துக்கு மட்டும் என்று குறிப்பிட்டுக் கொடுப்பார்களல்லவா? பரமசிவத்தின் ஒடுகால் தண்ணிரும் இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கும் சேர்த்து அரை அணா. துணி துவைக்க மட்டும் காலணா. மாதாந்திர வாடிக்கையானால் ஒரு ரூபாய். இது பரமசிவத்தின் கட்டண விகிதம். நாலைந்து வாளிகளும் தோய்க்கிற கற்களும் பரமசிவத்தின் ஒடுகாலில் உண்டு. தோய்க்குமிடத்துக்கு நிழல்தர ஒரு கொடுக்காப்புளி மரமும் உண்டு.

பரமசிவத்தின் நாட்படி வருமானம் முக்கால் ரூபாயிலிருந்து ஒண்ணேகால் ரூபாய் வரை கிடைக்கும். மாதாந்திர வாடிக்கைக்காரர்களிடமிருந்து மாத முடிவில் வரவு மொத்தமாகப் பத்துப் பதினைந்து ரூபாய்க்குக் குறையாது. மயானத்திலிருந்து திரும்புகிற கூட்டம் ஏதாவது 'சான்ஸ்' ஆக அவனுடைய ஒடுகால் பக்கம் வந்துவிட்டால் திடீர் யோகமாய் ஒண்ணரையிலிருந்து இரண்டு ரூபாய் வரை உபரி வருமானம் கிடைக்கும். இந்த உபரி வருமானத்தை எதிர்பார்த்துத் தினம் யாராவது செத்துப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் காத்திருப்பதும் நியாயமில்லை. அப்படியே யாராவது செத்துப் போனாலும் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான ஒடுகால்காரர்களில் எவருக்கு வேண்டுமானாலும் அந்த வருமான யோகம் அடிக்கலாம். மயானத்திலிருந்து திரும்புகிற கூட்டத்தைக் கவர்வதற்கு அங்கிருக்கும் ஒடுகால்காரர்களிடையே எப்போதும் அடிபிடிதான். எல்லாச் சாவுக்கும் அவ்வளவு கூட்டம் வருமென்று சொல்லவும் முடியாது. பிறந்ததும் பலருக்குத் தெரியாமல், சாவதும் பலருக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் சாகிறவர்கள் எத்தனை பேர்? அப்படிப்பட்ட வகையினரால் ஒடுகால்காரர்களுக்கு அதிக லாபம் இல்லையே! அந்த விதமான மனிதர்களால் உலகத்துக்கே என்ன லாபம் என்று தெரியாதபோது பரமசிவம் என்ன இலாபத்தை எதிர்பார்க்க முடியும்?

பரமசிவத்தின் ஒடுகாலில் இரண்டு 'காம்ப்ளிமெண்டரி' டிக்கெட்டுகளுக்கும் நிரந்தரமாக இடம் உண்டு. ஆரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பிரபலமடையாத ஏதோ ஒரு பிள்ளையார் கோவிலில் மணியடிக்கிற முத்துப் பண்டாரத்துக்கும், பரமசிவத்துக்கு குடிசை போட்டுக்கொள்ள இடம் (ஒடுகால் குடிசை அல்ல, கரைமேல் அவன் குடும்பம் வசிக்கிற குடிசை) கொடுத்திருக்கிற பங்காரு நாயக்கருக்கும், எப்போது வந்தாலும் ஒடுகாலில் குளிக்க ப்ரீபாஸ் உண்டு. அந்திசந்தி வேளைகளில் அவன் கண்களை ஏமாற்றிவிட்டு 'டிக்கட்' வாங்காமல் குளித்துப் போகிற 'வித் அவுட்' ஆட்களும் உண்டு.

பரமசிவத்துக்குப் பெரிய குடும்பம். வயதான தாய், தந்தை, நோயாளி மனைவி, வரிசையாக மூன்றும் பெண்மக்கள்.இரண்டு பெண்களுக்குக் கட்டிக் கொடுக்கிற வயசு, நெசவுத்தொழிலில் பட்டுப்போய் ஒடுகாலில் இறங்கியவன் அவன். தெற்குக் கரையில்