பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பிட்டுத் தோப்புக்கும் சிறிது தொலைவு மேற்கே தள்ளிப் பங்காரு நாயக்கர் குடிசை போட்டுக்கொள்ள விட்டிருந்த இடத்துக்கு மாச வாடகை எட்டு ரூபாய்.

பரமசிவத்துக்கு ஒடுகாலில் தண்ணிர் ஊறுவதற்குப் பதில் அவ்வளவும் பணமாக ஊறினாலும் நல்லதுதான். வையையில் வெள்ளம் வருவது அதிசயமானாலும் மகசூல் காலத்தில் அணைத் தண்ணீரோ அபூர்வமாக முல்லைக்கால் தண்ணீரோ திறந்து விட்டுவிடுவார்கள். முழங்கால் அளவு தண்ணீர்தான் பாயும். ஆனாலும் ஒடுகால் மூழ்கிவிடும். மலையாளத்துக்காரன் பாண்டிக்காரனுக்குக் கொடுத்திருக்கிற சீதனமான முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் நின்ற பின் மணலில் புதைந்து போயிருக்கும் தோய்க்கிற கற்களைத் தேடி எடுப்பது பெரிய காரியம்.அப்படித் தேடி எடுக்கிறபோது ஒடுகால்காரர்களுக்குள் எல்லைப் பிரச்னைகளும் கல்லெடுப்புப் போர்களும் உண்டாவது இயல்பு.

இரவு நேரங்களில் ஒடுகாலுக்குக் காவலில்லாவிட்டாலும் காவலிருப்பது போல் ஒர் 'அத்து' உண்டாக்க வேண்டும். இல்லா விட்டால் ஜட்காக் குதிரைகளைக் கொண்டு வந்து குளிப்பாட்டி ஒடுகாலை நாற அடித்துவிடுவான்கள். இப்படிச் சொல்வதனால் ஜட்காக் குதிரை குளிப்பாட்டாமல் இருக்கிற பட்சத்தில் தண்ணீர் நாறாமல் இருக்குமா என்று உத்தரவாதம் கேட்கப்படாது. ஏதோ குறிப்பிட்டுக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நாற்றம் இருக்கத்தான் செய்யும். பஞ்சாலையில் உழைத்து உழைத்துப் பஞ்சடைந்து போய்க் கொண்டிருக்கிற அந்தப் பிரதேசத்து மக்களுக்கு நாற்றமும் பழகிப் போன உணர்வுதான். எப்போதாவது அருமையாக நுகர்கிற காரணத்தால் வாசனைதான் நாற்றத்தைப் போல் அவர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றி உறுத்தும்.

பரமசிவம் பத்துத் தறிகாரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த பெருமை பழங்கனவாகப் போய்விட்டது. பஞ்சம் பிழைக்கக் குடிபெயர்ந்து ஊர் பெயர்ந்து நட்டாற்றில் வந்து நின்றாயிற்று. ஒடுகாலுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையிலேயே நட்டாற்றுக்கு வந்து நாதியில்லாமல் நின்றாயிற்று. மனிதர்கள் பதிந்து வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் இருந்ததனால்தான் பழங்காலத்தில் ஊர்களுக்குப் 'பதி' என்று பெயர் வைத்தார்களாம். இந்தக் காலத்தில்தான் நடுத்தரமான மனிதன் எந்த ஊரிலும் பதிந்து வாழ முடிவதில்லையே. சவக்குழியைத் தவிர நிலையாகப் பதிகிற இடம் வாழும்போது இல்லைதான். அதற்காக வாழும்போதே சவக்குழியைத் தோண்டிக்கொண்டு விட முடியுமா, என்ன? அப்படித் தோண்டிக் கொள்வதற்குத் தெரியாததாலோ அல்லது அதற்குப் பதிலாகவோ ஊர் விட்டு ஊர் வந்து ஒடுகாலைத் தோண்டிக்கொண்டு உட்கார்ந்து விட்டான் பரமசிவம் என்கிற முன்னாள் நெசவாளி. அவன் நம்பிய தொழில் அவனை நட்டாற்றில் கைவிட்டு விட்டாலும் நட்டாறு அவனைக் கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 'ஆற்றுப் பெருக்கு அற்று அடி சுடுகிற நாளிலும் ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்' வையை அல்லவா?

பாவு போட்டிருக்கிற நூலுக்குக் கஞ்சி தெளிக்கு முன் பலபல வென்று விடிகிற நேரத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த உடுப்பி சங்கர பவனில் முறுகல் தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிய நாட்களை இப்போது நினைத்தாலும்