பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பிட்டுத் தோப்பு 485

சுகமாகத்தான் இருக்கிறது. செவ்வாய்ப் பேட்டையையும் உடுப்பி சங்கர பவனையும், பத்துத் தறிகள் வைத்து ஆண்ட பவிஷையும் இனிமேல் நினைத்து என்ன பயன்? நினைவுக்குள்ளேயே துருப்பிடித்துப் போனவற்றை மேலும் துருப்பிடிக்கச் செய்வதைத் தவிர வேறு பயனில்லை.

அரக்கன் வாய் திறந்து அலறுவதுபோல் சங்கு ஊதும் மாபெரும் பஞ்சாலைகள் உண்டான பின்பு பரமசிவனைப் போல் சிறிய நெசவாளிகள் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட பஞ்சாலைகள் ஏதாவதொன்றில் குடும்பத்தோடு சரணடையலாம் என்றுதான் மீனாட்சிபட்டணத்துக்கு வந்தான் பரமசிவம். நவீன எந்திரங்கள் வந்து சேர்ந்து மனித எந்திரங்களைவிடச் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியதனால் எங்கே பார்த்தாலும் ஆள் குறைப்பு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். பரமசிவம் நினைத்துக் கொண்டு வந்தது போல் மதுரையில் வேலை காய்த்துத் தொங்கவில்லை. குடும்பத்தோடு சில நாட்கள் தெருவில் நின்றான். அப்புறம்? அப்புறம் என்ன? தெரிந்ததுதானே? தெருவில் நிற்காமல் ஆற்றில் போய் நின்றான்.

பரமசிவம் வையையில் இறங்கிவிட்டான். இப்போது அவனை நம்பிப் பலபேர் வையையில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள், குளிப்பதற்காகத்தான். உள்ளூர் ஒடுகால்காரர்களுக்கு அவன் மேல் வயிற்றெரிச்சல் கிளம்பியது. தொழில் பொறாமை என்பது உலகத்தில் இல்லாத இடம் ஏது, அது வையை ஆற்று மணல்மேலும் இருந்தது. ஒரே உலகம், யுனிவர்ஸல் ஹியுமானிடி என்று வெண்டல் வில்கியும், உலகத்துத் தத்துவக்காரர்களும் அடித்துக் கொள்வதைப் பற்றிப் பிட்டுத் தோப்பின் கரையில் இருப்பவர்கள் அதிகமாகக் கவலைப்படுவது கிடையாது. அங்கே ஒரே தத்துவம்தான் உண்டு.அதுதான் வயிற்றுப்பசி. அதன் அடிப்படையில் வாழ்க்கைப் போட்டி வடக்கு, தெற்கு, திருநெல்வேலிக்காரன், மதுரைக்காரன், சேலத்துக்காரன் என்கிற எல்லாவிதமான பிரதேச மனப்பான்மையும் இருந்து பரமசிவத்தைத் தொல்லைக்குள்ளாக்கியது.

பரமசிவம் தன்னைத் தவிர ஆறு பேர்கள் அடங்கின குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கவலையுடன் அக்கம் பக்கத்து ஒடுகால்காரர்களின் பொறாமைக்கும் சேர்த்துக் கவலைப்பட நேர்ந்தது.

அப்போது ஆற்றில் கால்தண்ணீர் விடும் காலத்தின் கடைசிப் பருவம். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ஆற்றில் தண்ணீர் ஓடிய பின் மறுபடியும் ஒடுகால்களின் அவசியம் ஏற்பட்டிருந்தது.

எல்லாரையும் போலப் பரமசிவமும் தன்னுடைய வழக்கமான இடத்தைத் தேடிப் புதையுண்டு கிடந்த கற்களை எடுத்துப் போட்டு ஒடுகால் தோண்டினான். நீரோட்டத்தில் சாய்ந்து போயிருந்த கொடுக்காப்புளி மரத்துக்கு முட்டுக் கொடுத்து நேரே நிறுத்தினான். சர்வே எல்லைக்கல் போல் அவனுடைய ஒடுகாலுக்கு அந்த மரம் அடையாளம்.

பிட்டுத் தோப்பும், அதிலிருக்கிற மண்டபமும் ஆவணி மாதம் அந்தத் திருவிழா நடக்கிற நாளில்தான் பக்தர்களுடைய கூட்டத்துக்கு உரியது. மற்ற நாட்களில் போது