பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

போகாமல் மூணு சீட்டு விளையாடுகிறவர்களும் குஸ்திப் பள்ளிக்கூடவீரர்களும் தனி அரசோச்சுகிற இடம்தான்; சில மாலை நேரங்களில் பொதுக்கூட்டமும் நடக்கும்.

பரமசிவத்தின் ஒடுகாலுக்கு எதிர்த்தாற்போல் பாண்டியன் குஸ்திப் பள்ளிக்கூடம் என்று ஒரு கோதா இருந்தது. காலையிலும், மாலையிலும் அங்கே குஸ்திக்காகப் பத்துப் பன்னிரண்டு முரட்டு இளைஞர்கள் வருவார்கள். 'பாண்டியன்' என்பவன்தான் குஸ்தி சொல்லிக் கொடுக்கிற வஸ்தாது. பாண்டியனும், அவனைச் சேர்ந்த ஆட்களும் பெரிய வம்புக்காரர்கள் என்பது பரமசிவத்துக்குத் தெரியும். குஸ்திப் பள்ளிக்கூடத்து ஆட்களே கோதாவையொட்டி ஆற்றில் தங்கள் சொந்த உபயோகத்துக்கு ஒடுகால் ஒன்று தோண்டியிருந்தார்கள்.

கால் நீர் ஒடிய சில வாரங்களுக்குப் பின் எல்லா ஒடுகால்களும் தோண்டப்பட்டபோது குஸ்திப் பள்ளிக்கூடஒடுகால் மட்டும் தோண்டப்படவில்லை. அதைத் தவிர்த்துப் பார்த்தால் அந்த இடத்தில் அருகே இருந்தது பரமசிவத்தின் ஒடுகால்தான்.

அன்று காலை குஸ்தி முடிந்ததும் பாண்டியனும், இன்னும் பத்துப் பன்னிரண்டு குட்டிப் பயில்வான்களும், பரமசிவத்தின் ஒடுகாலில் வந்து அவனிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமலே குளிக்க ஆரம்பித்தார்கள். போகும்போது ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள், அல்லது காசு கொடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்துவிட்டான் பரமசிவம். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவர்கள் காசு கொடுத்துவிட்டுப் போகவுமில்லை.நன்றி கூறிவிட்டுப் போகவுமில்லை.அட்டகாசமாக வந்து குளித்துவிட்டுப்பேசாமல் போய்விட்டார்கள்.

அன்றைக்குச் சாயங்காலமும் அப்படியே நடந்தது. எத்தனை நாளைக்கு இப்படி நடக்கப் போகிறது? தங்களுடைய ஒடுகாலைத் தோண்டிக்கொள்கிற வரைதானே இங்கே வந்து இப்படிச் சீரழிக்கப் போகிறார்கள்? தொலையட்டும் என்று இரண்டு நாளைக்குப் பொறுமையாக இருந்துவிட்டான் பரமசிவம். அவன் பொறுமையாக இருந்ததற்குக் காரணம் வீண் கலகத்தை உண்டாக்க வேண்டாம் என்பதுதான்.

‘அத்தனை பேரும் உள்ளுர்க்காரர்கள். ஆள் கட்டும், உடற்கட்டும் உள்ளவர்கள். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல என்று பரமசிவம் விட்டுப் பிடித்துக் கொண்டு வந்தான். எவ்வளவு நாளைக்கு விட்டுப் பிடிக்க முடியும்? விட்டுப்பிடிக்க முடியாத காலவரையறைக்குத் தொடர்ந்தது இந்த வம்பு.

நாள் தவறாமல் காலையும், மாலையும், தடியன் தடியனாக இந்தக் குஸ்திப் பள்ளிக்கூடத்து ஆட்கள் வந்து குளிக்க ஆரம்பித்ததனால், பெண்டு பிள்ளைகளும் சற்றே நாகரிகமான ஆட்களும், பரமசிவத்தின் ஒடுகாலுக்கு வருவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். வாடிக்கைகள் குறைய ஆரம்பித்தன.

“என்ன ஐயா, முண்டன், முண்டனாக வந்து தண்ணீரைக் கலக்குகிறான்.பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறீரே. சின்னஞ் சிறிசுகள் குளிக்கிற இடத்துலே இப்படிச் செய்யலாமா? நாளைப் பின்னே இந்த ஒடுகால் பக்கம் யாராச்சும் வருவார்களா?”