பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / பிட்டுத் தோப்பு 487

என்று வயது மூத்த ஆச்சிக்கிழவி ஒருத்தி அன்று காலையில் பரமசிவத்திடம் அங்கலாய்த்துக் கொண்டு போனாள். ஆனால் பரமசிவம் யாரிடம் போய் அங்கலாய்த்துக் கொள்வான்?

பயில்வான்களுடைய குளிப்பு என்றால் காக்கை முழுக்குப்போல் அல்ல. குஸ்தி போட்டு விட்டு வியர்வை மினுமினுக்கும் உடம்போடு வந்தால் தண்ணீரில் அமுக்கிக் கிடக்கிற சுகத்தைக் குறைவாகவா அநுபவிக்க விரும்புவார்கள்?

வஸ்தாது (வாத்தியார்) பயில்வானாகிய பாண்டியனோ சரியான மதயானை. ஒடுகாலில் சரிபாதி இடத்தில் துளைந்து நீராட வேண்டும் அவனுக்கு. தன்னோடு போகாமல் சீடப் பிள்ளைகளையும் அவன் கூட்டிக்கொண்டு வந்தான்.

காலையிலும், மாலையிலும் இந்த குஸ்திப் பள்ளிக்கூட ஆட்கள் ஒடுகாலில் இறங்கிக் கொட்ட மடிக்கிற போது காசு கொடுத்துக் குளிக்க வருகிறவர்கள் பரமசிவத்தின் ஒடுகால் பக்கம் எட்டிப் பார்க்கத் தயங்கினர்.

குறிப்பாகச் சொல்லிப் பார்த்தான் பரமசிவம். பாண்டியன் கும்பல் புரிந்து கொண்டு விலகிப்போகிற வழியாயில்லை. பாண்டியனிடமே நேரில் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திணறினான் பரமசிவம், தர்மசங்கடமான நிலை. இதில் தர்மம் பாண்டியனுக்கு, சங்கடம் பரமசிவத்துக்கு.

“நீங்கள்ளாம் ரொம்பப் பெரியவங்க நான் ஏழை. இதை வச்சுத்தான் பொழைப்பு நடக்கணும். வாடிக்கைக்காரங்க எல்லாம் ஒதுங்கறாங்க.எனக்குக் கட்டுப்படியாகலே” என்று பாண்டியனிடம் நேரில் கூறியும் பார்த்தான் பரமசிவம்.

“நீ என்னமோ சேலத்துலேருந்து வர்ரப்பவே இந்த எடத்துக்குப் பட்டா எழுதி வாங்கிட்டு வந்த மாதிரியில்லே பேச்சுப் பேசுறே? வைகைத் தண்ணிலே குளிக்கிறதுக்கு நீ என்னா தானாவதி” என்று துடுக்காக எதிர்த்துக் கேட்டான் பாண்டியன். நம்பிக்கையோடு மேலும் பேச்சைத் தொடர்ந்தான் பரமசிவம்.

"ஐயா! அதுக்குச் சொல்லல்லே, தண்ணி ஒண்ணும் நீங்க குளிச்சதாலே குறைஞ்சிடாது. ராவுலே எட்டு மணிக்கி மேலே நீங்க வந்து எத்தினிவாட்டிக் குளிச்சாலும் நான் ஏன்னு கேட்கப் போகிறதில்லே. ஆணும், பெண்ணும் சிறிசும் பெரிசுமா, நாலு தினுசுவாடிக்கைக்காரங்க குளிக்க வருகிறப்போநீங்கள்ளாம் இருந்தா வரதுக்கே கூசுறாங்க. சங்கோஜப்படறாங்க. நானும் இதைக்கொண்டு தான் பொழைக்கணும்”.

“அட சரிதான் போய்யா! மகா பிழைப்பாம், பிழைப்பு. நாங்க அப்பிடித்தான் வருவோம். நல்லா முங்கிக் குளிப்போம். யாரும் எங்களைத் தடுக்க முடியாது. முடியுமானால் நீ செய்யிறதைச் செஞ்சுக்கோ.”

குஸ்திக்குச் சவால் வருகிற மாதிரிப்பதில் வந்தது பாண்டியனிடமிருந்து நியாயம் பிறக்குமென்று நம்ப இடமே இல்லை.