பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இதற்கப்புறம் பரமசிவம் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டான். மறுநாள் அருகில் இருக்கிற வேறு ஒடுகால் காரர்கள் நான்கு ஐந்து பேரிடம் போய் இந்த விஷயத்தில் தனக்குத் துணையாயிருந்து ஒத்துழைத்து நியாயம் வாங்கித் தரவேண்டுமென்று கேட்டான்.உள்ளூர் ஒடுகால்காரர்களாகிய அவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே பரமசிவத்தின் மேல் பொறாமை, அவனைப் போல் ஓர் அயலான் அங்கே ஒடுகால் போட்டிருப்பதே அவர்களுக்குப் பிடிக்காதபோது ஒத்துழைக்க எப்படி முன்வருவார்கள்? இது உன் சொந்த விவகாரம். எங்களிடம் வராதே’ என்று மறுத்துவிட்டார்கள். பரமசிவத்துக்கு முகத்தில் அடித்தாற்போல் ஆயிற்று.

நாளுக்கு நாள் விவகாரம் முற்றியது. பாண்டியன் கும்பல் முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பரமசிவனுக்கு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தது. ஒடுகாலில் உள்ள வாளிகளைச் சொல்லாமல் கொள்ளாமல் வேறு காரியங்களுக்குத் துக்கிக்கொண்டு போவது, வேட்டி துவைப்பதற்கென்று தனியாக இருக்கிற உறையில் வேட்டி துவைக்காமல், குளிப்பதற்குத் தேக்கியிருக்கும் நீரில் வேட்டி துவைப்பது என்று வம்புகள் வளர்ந்தன. பாண்டியனுக்கு யாராவது 'ஸ்குரு; ஏற்றி விட்டிருப்பார்களோ என்றுகூடப் பரமசிவத்துக்குச் சந்தேகமாக இருந்தது. எந்தத் தொழிலானாலும் அருகிலுள்ளவர்களின் அநுதாபம் இல்லாமல் போனால் ஒன்றும் நல்லபடி நிறைவேற்ற முடியாது. தன்மேல் அவர்களெல்லாம் பகைவைத்துக் கொள்ளும் விதத்தில் பரமசிவம் அவர்களுக்கு மனத்தாலும் கெடுதல் நினைத்ததில்லை. ஆனால், அவர்கள் அவனுக்குக் கெடுதல் நினைத்தனர்; செய்தனர்; செய்வித்தனர். அது இலை மறை காய் மறைவாக அவனுக்கே புரிந்தது.

ஆவணி மாதத்தில் ஒரு முன்னிரவு. பெளர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருப்பதால் முழுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலவு மேகச் சிதறல்களே இல்லாத வானத்தில் யாரும் எழுதாக் கவிதையாய் விளங்கியவாறு நகர்ந்து கொண்டிருந்தது. வையை யாற்று மணல் வெளியும் கரை மேட்டில் தென்னை மரக் கனவுகளும் கோல வெறிமூட்டும் கொள்ளை எழில் சுமந்து நின்றன. பிட்டுத் தோப்புக்குள் மண்டபத்தின் முன்னால் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளைக்குப்பிட்டுக்கு மண் சுமந்த திருநாளாயிற்றே. இதே வேளையில் நாளைக்கு இந்த இடம் இப்படியா இருக்கும்? 'ஜே ஜே' என்று கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிராதா? குடை ராட்டினமும், கடைகளுமாக மணல் வெளி கலகலவென்று கலியாண வீடுபோல் இருக்குமே! நாளைக்கு எப்படி இருந்தால் என்ன? பரமசிவத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு நிலைமை பட்டினி.வீட்டில் எல்லோரும் அரைப்பட்டினி என்றால் அவன் முழுப்பட்டினி, ஒடுகாலில் வருமானமில்லை. மாலை நாலரை மணி வரையில் கிடைத்திருந்த சம்பாத்தியம் ஆறேமுக்கால் அணா. அதை வீட்டுப் பாட்டுக்காகக் கொடுத்தனுப்பியிருந்தான். மூத்த மகள் வந்து சிறிது நேரத்துக்கு முன்தான் வாங்கிக் கொண்டு போயிருந்தாள். இன்று அவன் இவ்வளவு நேரத்துக்கும் மேல் இருட்டில் காத்துக் கொண்டிருந்தது ஒரு பயனை எதிர் பார்த்துத்தான்.