பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அழப்படுத்தினார்கள். பரமசிவமும் மனிதன்தானே? அவனுக்கு மனம் குமுறியது. கண் பஞ்சடைகிற பசி வேறு. வயிறும் மனமும் பற்றி எரிந்தன.

“பிள்ளை குட்டிக்காரனை இந்தப் பாடு படுத்துறீங்களே. இது அடுக்குமா?. நீங்க எல்லாரும் இப்பிடிப் போயிடனும்” என்று கண் சிவக்க உதடுதுடிக்கக் கீழே குனிந்து ஒரு கை மண்ணை வாரிப் பாண்டியன் முகத்துக்கெதிரே தூற்றினான் பரமசிவம்.

“கொழுப்பைப் பாருடா ராஸ்கலுக்கு எந்தக் காட்டுலே இருந்தோ பஞ்சம் பிழைக்க வந்த பயல் மண்ணை வாரித் துத்தறான். கட்டி வச்சு உதைங்கடா. சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே பக்கத்திலிருந்த கொடுக்காபுளி விளார் ஒன்றை ஒடித்துக்கொண்டு பரமசிவத்தின் மேல் பாய்ந்தான் பாண்டியன். கோபம் கிளம்பி விட்டால் அவனுக்குக் கண் மண் தெரியாது.

சுளீர், சுளீர் என்று எலும்பும் தோலுமான அந்தப் பரமசிவத்தின் உடம்பை விளார் உரிக்கிறது. பரமசிவத்தின் வாயிலிருந்து, “பாவி கொல்றானே. கேட்பாரில்லையா. ஐயோ. அப்பா..” என்ற அலறல். பாண்டியனுக்கோ கொலைவெறி விளார் ஒடிகிற மட்டும் பிச்சு உதறிவிட்டான். பரமசிவத்தின் உடம்பில் குருதி கசியும் கோடுகள்.

"தெய்வமே! நீ இந்த இடத்திலே பிட்டுக்கு மண் சுமந்தது நிசமானா நீயே இவங்களைக் கேளு” என்று அலறிக் கொண்டே சுருண்டு விழுந்தான் பரமசிவம். பயங்கரப் பசி, உடம்பும் பூஞ்சை, மூர்ச்சை போட்டது.

ஒடிந்த விளாரை எறிந்தபின் எந்த இடத்தில் படுகிறதென்றும் பாராமல் வலது காலை ஓங்கித் தணியாத வெறியோடு பரமசிவத்தை ஒரு மிதி மிதித்து, “நாய்க்குப்புத்தி இனிமே வரும். வாங்கடா, போகலாம்” என்று தன் ஜமாவோடு போய்விட்டான் பாண்டியன்.

மறுநாள் காலை முத்துப் பண்டாரமும், பங்காரு நாயக்கரும் குளிக்க வந்தபோது பரமசிவத்தின் ஒடுகால் சுடுகாடு போலிருந்தது. அவனையும் காணவில்லை. பரமசிவத்தின் கிழத் தந்தையும், தாயும், மூன்று பெண்களும் அதே ஒடுகாலில் சேர்ந்து முழுகிக் கொண்டிருந்தார்கள்.

'மடி மேலே வளர்த்தபிள்ளை
மண்ணாயிப் போயிட்டியே'

என்று பரமசிவத்தின் தாய் பிலாக்கணத்தை இழுத்துக் கொண்டு அழுகை பொங்க ஈர உடையோடு நின்றாள். முத்துப் பண்டாரமும் பங்காரு நாயக்கரும் விக்கித்து நின்றார்கள்.

"ஐயா, உம்ம ஊர்லே எம்பையனைக் கொலை பண்ணிப்பிட்டான் ஐயா.போய்ப் பொசுக்கிட்டு வந்து முழுகிட்டிருக்கோம். இங்கே தெய்வம் உண்டுமா? இப்படியே இந்தப் பூமி இடிஞ்சி ஊரையே முழுங்கிடப்படாதா?’ என்று ஆக்ரோஷத்தோடு முத்துப்பண்டாரத்தைப் பார்த்துக் கையைச் சொடுக்கி முறித்தாள் அந்தக் கிழத்தாய். அந்தச் சொடுக்கு முறிகிற ஒலியில் பூமியே முறிவது போலிருந்தது.