பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / பிட்டுத் தோப்பு * 491

அங்கே பக்கத்திலிருந்த வேறு ஆள் ஒருவன் சிறிது தூரம் விலக்கி நடத்திக்கொண்டுபோய் முதல் நாள் மாலை நடந்தவற்றை முத்துப் பண்டாரத்துக்கும், நாயக்கருக்கும் சொன்னான். பாண்டியன் மிதித்துவிட்டுப் போன மிதி எக்குத் தப்பாய்ப் பட்டுப் பரமசிவம் இறந்து போனதையும் இராத்திரி பன்னிரண்டு மணிக்கே குஸ்திப் பள்ளியிலே வைத்துப் பாண்டியனைப் போலீஸார் கைது செய்து கொண்டு போனதையும் முத்துப் பண்டாரமும், நாயக்கரும் அறிந்தார்கள்.

அங்கே அன்று மாலை பிட்டுத் திருவிழா, பிட்டுத் தோப்பு நிறைய ஜனவெள்ளம். மேலே வானத்தில் நீலப்பட்டுக் கம்பளத்திலே பாற்குடம் சரிந்தது போல நிலா. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கிறார், பாண்டியனிடம் பிரம்படி படுகிறார், எல்லாம் பாவனையிலேயே நடைபெறுகிறது. “பெருமானே! யுக யுகாந்திரங்களுக்கு முன்பு இங்கே அரிமர்த்தன பாண்டியன் உம்மேல் அடித்த பிரம்படி அகில உலகெங்கும் உள்ள ஜீவராசிகள்மேல் பட்டு உறைத்ததாமே! நேற்று இதே இடத்தில் எங்கள் ஏழைப் பரமசிவன் மேல் பட்ட முரட்டுப் பாண்டியனின் அடி ஏன் உமது இதயத்தில் கூட உறைக்காமல் போய்விட்டது?” என்று ஒரு மூலையில் நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த முத்துப்பண்டாரம் மனமுருக எண்ணிக் கண் கசிந்தார்.

(கல்கி, 27.8.1961)