பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65. ‘ஸ்டேட்டஸ்’

ந்த உலகம் இருக்கிறதே - உலக-ம் இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடக் கவலை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, நானும், என் கவலைகளும் சேர்ந்தால் அதுவே ஒரு பெரிய உலகம். இரண்டு, நான் எதை எதைப் பற்றிக் கவலைப்படுகிறேனோ, அதைப்பற்றி இந்த உலகத்தில் வேறு எவரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. வேறு எவரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. ஆகவேதான் சொல்கிறேன், மறுபடியும் அடித்துச் சொல்கிறேன் உம்மையல்ல - நான் சொல்கிற விஷயத்தைத்தான்; நானும் என் கவலைகளுமே ஒரு தனி உலகம். அல்லது வேறு பலர் சொல்கிற மாதிரி ஒரு ‘தனி ரகம்’.

‘உலகம் தெரியாத பிள்ளை இத்தனை லட்சங்களைக் கட்டிக் காத்து எனக்குப் பின்னால் எப்படித்தான் ஆளப் போகிறதோ?’ என்று ரொம்ப ரொம்பப் பெரிய பணக்காரராகிய என் அப்பா என்னைப் பற்றி அடிக்கடி ரொம்ப ரொம்பக் குறைப்பட்டுக் கொள்கிறார்.

‘உலகம் தெரியாத பிள்ளை’ என்று இந்த அப்பா என்னைச் சொல்கிறாரே அது எந்த உலகத்தைப் பற்றி என்றுதான் நான் என் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறேன். ஏனென்றால் நான் தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தைப் பற்றி அப்பாவுக்குத் தெரியாது. அப்பா தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தை எனக்குப் பிடிக்காது. அப்பா தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தில் பணம்தான் பெரிசு. நான் தெரிந்து கொண்டிருக்கிற உலகத்தில் எதுவுமே பெரிசு இல்லை. அதிலே எல்லாவற்றையும் இனி மேல்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிசு பண்ணணும், இதுவரை எல்லாம் சின்னதாகத்தான் இருக்கு.

இதை நிஜமாக - ரொம்ப ரொம்ப நிஜமாகத்தான் சொல்கிறேன் நான். என் உலகத்தில் நான் யார் யாரைப் பற்றி, எதை எதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேனோ அவைகளைப் பற்றி எனக்கு முன்னாலும் சிலர் கவலைப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கவலைப்பட்டவர்களைப் பற்றித்தான் சரித்திரம் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறதே. என்னைப் பற்றி அப்படி யாரும் பிற்காலத்தில் எழுதக் கூடாது என்பதுதான் என் ஆசை. சரித்திரப் புத்தகத்தில் எழுதப்படுவதால், பரீட்சைக்குப் படிக்கிற பையன்களுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஞானியாக இருக்கலாம். ஆனால் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்படுவதற்காக மட்டும் ஞானியாக இருப்பதில் நிறையக் கஷ்டங்கள் உண்டு.

நான் இருக்கிறேனே - நான், ஞானியுமில்லை, கத்தரிக்காயுமில்லை. உங்கள் பாஷையில் அதாவது இதயத்தை இதயம் உணர முடிந்த பாஷையில் மக்கள் பாஷையில் சொல்லப் போனால், ‘நான் ஒரு லூஸ்’. அதையே மற்றவர்கள் என்னைக்