பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஸ்டேட்டஸ் 493

குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரிச் சொன்னால், 'அவன் ஒரு சுத்த லூஸ் பயல் சார்’ என்றுதான் சொல்லவேண்டும்.இதில் எனக்குத் திருப்தியளிக்கிற ஒரே அம்சம் வெறும் 'லூஸ்’ என்று மட்டும் சொல்லிவிடாமல் 'சுத்த லூஸ்' என்று சேர்த்துச் சொல்கிறார்களே அதுதான் லூஸாக இருப்பதிலும் சுத்தத்துடன் லூஸாக இருப்பது பெரிய காரியம்தானே? லூஸாயிருந்தால் எதிலும் சுத்தமாயிருக்க முடியாது. சுத்தமாயிருந்தால் எதிலும் லூஸாக இருக்க முடியாது. நான் லூஸா இருந்து கொண்டே சுத்தமாகவும், சுத்தமாயிருந்து கொண்டே லூஸாகவும் இருப்பது விசேஷம்தானே?

எங்கள் - என் அப்பா இருக்கிறாரே, அவர் இந்த மெட்ராஸில் ரொம்ப ரொம்பப் பெரிய, "ஸ்டேட்டஸ் உள்ளவர். இரண்டு பெரிய 'கேடிலாக்' கார் வைத்திருக்கிறார். 'சாந்தோம் பீச்' அருகே பெரிய பங்களா. கடற்காற்று ஜிலுஜிலு என்று எப்போதும் பால்கனியில் வீசிக் கொண்டிருக்கும். இந்தப் பட்டினத்தில் சமுத்திரமும் அதன் காற்றும்கூட என் அப்பாவைப் போல பணக்காரர்களுக்குத்தான் - 'ஸ்டேட்டஸ்’ உள்ளவர்களுக்குத்தான் சொந்தம். நான் ஸ்டேட்டஸ் கொண்டாடத் தெரியாத லூஸாக இருக்கிறேனே என்பதில் என் அப்பாவுக்கு மிகவும் வருத்தம் பெண்களுக்குக் கற்பு மாதிரிப் பணக்காரனுக்கு 'ஸ்டேட்டஸ்' வேணும்டா! 'ஸ்டேட்டஸ்' - என்று அப்பாவாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். பணக்கார வீட்டுப் பெண்களைப் பொறுத்தமட்டில் 'கற்பு’ எவ்வளவு நிச்சயமோ 'அவ்வளவு' நிச்சயம்தான் இந்த "ஸ்டேட்டஸும்' என்று லூஸ் பயலாகிய எனக்குத் தோன்றுகிறது. இப்படி எனக்குத் தோணாதது சரியோ தப்போ, தெரியலை சார். நான் இருக்கேனே எனக்கு வயசு இருபத்திரண்டு. ஒரு காலேஜில் படிக்கிறேன். எந்தக் 'காலேஜ்' என்று கேட்காதீர்கள். குப்பையில் எந்தக் குப்பையானால் என்ன? எல்லாம் ஒன்றுதான். 'படிப்புத்தான் நிஜமான 'ஸ்டேட்டஸ்' என்று என்னுடைய புரொபஸபர் சொல்கிறார். பணம்தான் நிஜமான 'ஸ்டேட்டஸ்' என்று என் அப்பா சொல்கிறார். சிகரெட் பிடிக்கிறது, பாண்ட், டை, இதெல்லாம் அணிகிறது, சினிமா பார்க்கிறது போன்ற நாகரிக விவகாரங்கள் தான் 'ஸ்டேட்டஸ்' - என்று என் சினேகிதன் பெர்ணான்டோ சொல்கிறான். இதுலே யார் சொல்றது நிஜம்? யார் சொல்றது பொய்?

ஆக மொத்தத்தில் உண்மையாக எதுதான் 'ஸ்டேட்டஸ்' என்று எனக்கு இன்னும் புரியலே. ஒருவேளை ஸ்டேட்டஸைப் புரிஞ்சுகிற ஸ்டேட்டஸ் எனக்கு இல்லையோ என்னவோ? இந்த உலகத்திலே அதாவது நான் கவலைப்படற உலகத்திலே பல விவரங்களைப் பற்றி நான் யோசனை பண்ணிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியலை அல்லது ஒரு முடிவும் தெரியலை அல்லது வேறே விதமாகச் சொல்லப் போனால் ஒன்றுக்குப் பதில் பல முடிவு தெரியறது. யோசனையில் ஒரே ஒரு முடிவு தெரியாததுக்குக் குழப்பம் என்று பேரானால் பல முடிவு தெரியறதும் குழப்பம்தான் -இல்லையா சார்?

ஆக (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன். இதுக்கு மேலே ஒண்ணுமே எழுத வேண்டாம்னு தோணறது. ஆனாலும் கைவிட வில்லை. மேலே மேலே எழுதிக் கொண்டே போகிறது என் கை.