பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எனக்கு ரொம்ப ரொம்பப் பேராசை உண்டு.அது இந்த உலகத்தில் எல்லாருக்கும் இருக்கிற மாதிரிப் பேராசை இல்லே. அப்படி இருந்தால்தான் என் அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரே! நான் சொல்ற பேராசை - நான் கவலைப்படுகிற உலகத்துக்கு மட்டும்தான் லாயக்கு என் அப்பா கவலைப்படற உலகத்திலே அது செல்லுபடியாகாது சார்.

காலம் கார்த்தாலே ஒன்பதரை மணிக்கு பீச் ரோடிலே ஜிலுஜிலுனு சமுத்திரக் காற்றை அனுபவித்துக்கொண்டு ‘கேடிலாக்' கார்லே என்னைக் காலேஜுக்குக் கொண்டு போயி விடறான் டிரைவர். அத்தனாம் பெரிய கார்லே நான் ஒத்தனே ஒத்தன்தான் தனியாப் போறேன். அனலாக வாட்டிப் பிழியற சமுத்திரக் கரை வெய்யில்லே - எதிர் வெய்யில்லே பஸ்ஸுக்குக் காத்திண்டிருக்கிறவர்களை எல்லாம் ஏத்திக் கொண்டு போய் அவரவர்கள் போக வேண்டிய இடத்திலே விடச் சொல்லிவிட்டு நான் இறங்கி நடந்துடனும்போல எனக்குத் தவிப்பாயிருக்கு. இந்த டிரைவர் அப்படிச் செய்ய ஒப்புக்கமாட்டான். இவன் அப்பாவுக்குப் பதில் சொல்லனுமே, அப்புறம்?

இப்படி எனக்கு எத்தனையோ ஆசை! பேராசை பீச்சிலே உடம்பிலே துணியில்லாமே மணல்மேலே புரள்கிற செம்பவடக் குழந்தைகளை எல்லாம் எங்க வீட்டுக்கு அழைச்சிண்டு போய் பிரிஜிடோரைத் துறந்து அதிலேருக்கிற ஐஸ்கிரீம், ஆப்பிள் பழம், வெண்ணெய் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக் கொடுத்துட்டு அந்தக் குழந்தைகள் பயந்து கொண்டே சாப்பிடறதைப் பார்த்து நான் மனசு குளிரணும். இப்பிடியும் எனக்கு ஒரு பேராசை உண்டு சார் என் உலகம் இருக்கிறதே அதில் இதுதான் நியாயமான பேராசை என்று எனக்குப் படறது. நீங்க ஒப்புக் கொள்ளாவிட்டால் உங்க உலகம் வேறேதான். அம்மைத் தழும்பு மூஞ்சியும், பீப்பாய் உடலுமாகப் பாக்கறதுக்கு விகாரமாகக் காரில் ஏறிக் கொண்டு போற பணக்கார மாமிகளை எல்லாம் காரை நிறுத்திக் காதைப் பிடிச்சுத் திருகிக் கீழே இறக்கிவிட்டுட்டு அதே ரோடுமேலே பஸ்ஸுக்குத் தவம் பண்ணிக் கொண்டும் அதே சமயத்தில் காலிகளின் 'கண்வெட்டில்' சித்திரவதைப் பட்டுக் கொண்டும் நிற்கிற அழகிய ஏழைப் பெண்களை எல்லாம் அந்தக் காரில் ஏறச் செய்து அவரவர்கள் வீட்டிலே கொண்டு போய் விட்டுடனும்னு எனக்கு ஒரு பேராசை உண்டு சார்!

ஏன் தெரியுமோ? அந்த அழுமூஞ்சி மாமி நடந்து போறதுனாலே எந்தக் காலிப் பயலும் அவளைப் பார்த்து இளித்துக் கொண்டு பின் தொடரப் பேர்வது இல்லை. இந்தப் பெண்கள் நிற்பதனால் இவர்களுக்கு அத்தகைய ஆபத்துக்கள் நிறைய உண்டு சார்! காரணம் அதுதான்.

அசட்டுத்தனமா இப்படி எத்தனையோ பேராசை சார் எனக்கு. இதிலே ரெண்டு; ஒண்ணை மற்றவங்ககிட்டச் சொல்லிப் பார்த்ததிலே என்னை "அசடன்’னு சொல்றாங்க சார் நான் என்ன பண்றது? இப்போ என்னோட புகழை எல்லாம் ஒவ்வொண்ணாகக் கூட்டி எண்ணுங்கசார் (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம் (3) நான் ஒரு காலேஜ் மாணவன் (4) நான் ஒரு அசடு-இப்போதைக்கு இவ்வளவுதான்.