பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / 'ஸ்டேட்டஸ்' 495

இந்த கேடிலாக் கார்லே ஏறிப் போறதுக்கே ஒரு ஸ்டேட்டஸ் காரியத்தின் அவசரம்னுதான் எனக்குத் தோண்றது. அந்த அவசரம் ஏழைக்கும் இருக்கு. பணக்காரனுக்கும் இருக்கு சார்! சொல்லப் போனா ஏழைக்குத்தான் பணக்காரனைவிட அதிகமான அவசரங்கள் இருக்கு. ஆனா இந்த 'அவசரம்’கிற, தேவையைத் தவிர வேறு எதையோதான் 'ஸ்டேட்டஸ்’ன்னு அப்பா சொல்றார் சார் அப்பிடி அவர் சொல்றப்போ நான் அவரை மறுத்துச் சொன்னா, “நீ உருப்படப் போறதில்லே! குட்டிச் சுவராத்தான் போகப் போறே! ருஷ்யாவிலே பிறந்திருக்கணும்டா நீ.” என்று குத்தலாகப் பதில் சொல்றார் சார் அப்பா. இதுவும் எனக்குப் புரியலே சார் நிஜத்தைச் சொல்றதுக்கு அதாவது நான் வாழற உலகத்து நிஜத்தை நான் சொல்றதுக்கு நீ அங்கே பிறந்திருக்கணும், இங்கே பிறந்திருக்கணும் அப்படீன்னு அப்பா எதிர்ப்புப் பேசறதும் எனக்குப் பிடிக்கலே சார். இதுக்கெல்லாம் அடிப்படையான தகராறு இந்த ஸ்டேட்டஸ்'தான். நான் வாழற உலகத்துலே இருக்கிற 'ஸ்டேட்டஸ்’ங்கிற வார்த்தைக்கு எது அர்த்தமோ அது அப்பா வாழற உலகத்திலே இருக்கிற அர்த்தத்துக்கு மாறுபடறது சார்! அதனால்தான் சார் வம்பு ஒரு வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம் இருக்கலாம். ஒரு அர்த்தத்துக்கு ரெண்டு தொனி இருக்கப்படாது சார்!

மறுபடி இப்ப எண்ணுங்கோ சார்: (1) நான் ஒரு லூஸ் (2) நான் ஒரு குழப்பம் (3) நான் ஒரு காலேஜ் மாணவன் (4) நான் ஒரு அசடு (5) நான் ஒரு குட்டிச்சுவராகப் போய்க் கொண்டிருக்கிறேன் (6) நான் இங்கே இந்த நாட்டில் பிறந்திருக்கக்கூடாது.உலகத்திலே எல்லாரோட கஷ்டத்துக்கும் விடிவு வரணும்னு வெறுங்காலோடராத்திரிலே நடந்து புறப்பட்டதுக்காக நாம் புத்தருக்குச் சரித்திரத்தில் பெருமை எழுதிப் படிக்கிறோம் சார் சொல்லுங்கோ உண்டா, இல்லையா? அதே விஷயத்தை நான் இப்பச் சொன்னா, அப்பா 'நீ இந்த நாட்டிலே பிறந்திருக்கப்படாது'ங்கிறார் சார். ஒரு விஷயத்தைச் சொல்றதுக்குகூட ஸ்டேட்டஸ் வேண்டியிருக்கோ என்னவோ, தெரியலே எல்லா உயிர்களிலேயும் நான் இருக்கேன்’னு கீதையிலே கண்ணன் சொன்னதையேதான் நான் இன்னிக்கு அதே அர்த்தத்திலே இன்னும் தெளிவாகவே சொல்றதாக எனக்குப் படறது சார், ஆனா என்னை உருப்படாமல் போகிற பயல்’ என்று திட்டுகிறார்கள் சார். இது என்ன உலகமோ? எனக்கு வர வர ஒண்ணுமே புரியலை; ஒண்ணுமே பிடிக்கலை. ஒண்ணுமே தெரியலை, எங்க வீட்டிலே எங்கப்பாவே அவரோட அழுகிப்போன கொள்கைகளுக்கு என்னை அடிமையாக்கிடனும்னு பார்க்கிறார் சார். பிள்ளையை அடிமையாக்கி மகிழனும்னு ஆசைப்படற அப்பாக்கள்தான் சார் இந்த தேசத்துலே இன்னிக்கு ஆஸ்திகான்னு பேர் வாங்கறா.நீங்க என்ன நினைக்கிறீங்களோ, தெரியலை

எனக்கு இன்னொரு பேரையும் இப்பக் கூட்டிச் சேர்த்துக் கொண்டு நீங்க எண்ணிக்கலாம் சார் (1) நான் ஒரு லூஸ், (2) நான் ஒரு குழப்பம், (3) நான் ஒரு காலேஜ் மாணவன், (4) நான் ஒரு அசடு, (5) நான் ஒரு குட்டிச் சுவர், (6) நான் இங்கே இந்த நாட்டில் பிறந்திருக்கக்கூடாது. (7) நான் ஒரு உருப்படாத பயல். இப்படி என் உலகத்து விஷயங்களை நான் வாய்விட்டுப் பேசினதுக்காக எனக்கு நிறையப் பட்டங்கள் எல்லாம் கிடைச்சிருக்கு இப்படி முட்டாள் பட்டங்கள் கிடைச்சதைப் பத்தி நான்