பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66. 15-வது ஆண்டு அறிக்கை

ந்த முருகேசனைப் போல ஓர் அப்பாவி இருபதாம் நூற்றாண்டில் இருக்கக் கூடாதுதான். ஆனால் இருப்பது இவன் தவறில்லை. இவன் பிறந்து, வளர்ந்து, அழுது, சிரித்துப் படித்து வேலைக்கு வந்த சமயத்தில் இருபதாம் நூற்றாண்டுதான் நடந்து கொண்டிருந்தது. அது அந்த நூற்றாண்டின் தவறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகேசனுடைய அப்பாவித்தனமும், அவனும் நூற்றாண்டுகளைக் கடந்தவர்கள். எங்கள் முருகேசனை அதாவது ‘குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ அலுவலகத்தின் டைப்பிஸ்ட் முருகேசனை, அப்பாவி என்று சொல்ல வேண்டுமானால் சாதாரணமான அப்பாவி என்று சொல்ல முடியாது. காலத்தை வென்ற அல்லது காலங் கடந்த என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பாகச் சொல்ல வேண்டிய வடிகட்டின அப்பாவித்தனம் அது!

சென்ற சனிக்கிழமை மாலை சரியாக நாலரை மணிக்கு அந்த அப்பாவித்தனம் பொங்கி வழிந்த காரியம் ஒன்று நடந்தது! நான் - அதாவது குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக டைரக்டராகவும், அந்தக் கம்பெனியின் பெயரில் ‘பிரைவேட் லிமிடெட்’ என்பதற்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டிருப்பவனாகவும் இருக்கிற நான் (கம்பெனியின் முதலாளி என்று தொழிலாளியின் பாஷையில் சொல்லப்படுகிற நான்) இந்த அப்பாவியின் சேவையைப் பாராட்டுவதற்கு ஆசைப்பட்டு என்னவோ செய்யப் போய் அது எப்படியோ முடிந்து விட்டது.

அதையேன் கேட்கிறீர்கள்! சென்ற சனிக்கிழமை மாலை இவன் நடந்து கொண்ட விதத்தைச் சாதுத்தனம் என்பதா, கோழைத்தனம் என்பதா, தியாகம் என்பதா, அல்லது கம்பெனியில் எல்லாரும் சொல்கிற மாதிரி அப்பாவித்தனம் என்பதா? என்னால் இந்த முருகேசனைப் புரிந்து கொள்ள முடியவில்லையே? ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், சுவிட்சர்லாந்திற்கும் போய்த் தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு வந்தவனுக்குத் தன் கீழ் வேலை பார்க்கும் தொண்ணூறு ரூபாய்ச் சம்பளக்காரனான டைப்பிஸ்ட் ஒருவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியந்தான். நான் தாய் நாடு திரும்பியதும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் எல்லாரும் கூடிச் சேம்பர் பில்டிங்ஸ் ஹாலில் எனக்குக் கொடுத்த வரவேற்பில் என்னென்ன வெல்லாம் சொல்லிப் புகழ்ந்தார்கள்!

“சிவஞான சுந்தரம் (நான்) நமது தமிழ் நாட்டுத் தொழிலதிபர்கள் எல்லாருக்கும் முன்னணியில் நிற்கிறார். எத்தனையோ பேர் மேல்நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வருகிறார்கள். ஆனால் அந்தப் பிரயாணங்களை திரும்பி வந்து முழு அளவில் இங்கே பயன்படுத்தி ஆச்சரியப்படத்தக்க விளைவுகளைச் செய்கிறவர்
நா.பா. I - 32