பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

குபேரா கெமிகல்ஸ் அதிபராகிய நம் சிவஞான சுந்தரம் அவர்கள் தான். அண்மையில் அவர் சுவிசர்லாந்திலுள்ள பெரிய கடிகாரக் கம்பெனி ஒன்றோடு ஒப்பந்தம் முடித்திருக்கிறார். அதன் பயனாக இண்டியன் ரிஸ்ட்வாட்ச் மேக்கர்ஸ் என்ற புதுக் கம்பெனி ஒன்றை இங்கே தொடங்கப் போகிறார்.”

இதுதான் போகட்டும் ரோடரி கிளப்பில் கொடுத்த வரவேற்பில் கொஞ்சமாகவா புகழ்ந்தார்கள்? சக தொழிலதிபர்கள் புகழ்வதை எல்லாம் மெய்யாகவும் நம்புவதற்கில்லை. வியாபாரிக்கு வியாபாரி நாகரிகமாக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதைச் சொல்வதற்குக் கெளரமான பெயர்தான் புகழ்ச்சி என்பது. இந்தப் புகழ்ச்சியிலும் வஞ்சகம் உண்டு!

நான் சுவிசர்லாந்திலிருந்து திரும்பவும், கம்பெனியின் 15-வது ஆண்டு விழா எவ்வளவு பொருத்தமாக இருந்தது? சென்ற சனிக்கிழமை எனக்கு வரவேற்பையும் ஆண்டு விழாவையும் சேர்த்தே நடத்தினபோதுதான் முருகேசன் அப்படி நடந்துகொண்டான். கம்பெனி தொடங்கின நாளிலிருந்து சர்வீஸில் இருக்கிற ஒருவரை இந்தப் பதினைந்தாவது ஆண்டு விழாவின் போது பாராட்ட வேண்டுமென்றுதான் நான் அப்படிச் செய்தேன். மேலும் இந்தப் பதினைந்தாவது ஆண்டு விழா 'குபேரா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்'டின் வரலாற்றில் சிறப்பானது. என்னுடைய நீண்டநாள் கனவான 'இண்டியன் ரிஸ்ட்வாட்ச்மேக்கர்ஸ்’ என்ற புதிய தொழில் தொடங்குவதற்கு வேண்டிய அநுமதியும் இந்த ஆண்டுதான் கிடைத்திருக்கிறது. அத்தனை பேரும் விநயமாக நடந்து கொண்டபோது அந்தக் கூட்டத்தில் அவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவே முருகேசன் மட்டும் ஏன் அப்படி நடந்து கொண்டான்? அவ்வளவு பெரிய கூட்டத்தில் எல்லாருக்கும் முன்னால் அவமானப்படுத்தினாற் போல நடந்து கொண்டானே? ஒர் எழுத்துக்கூடத் தப்பு விடாமல் இவன் டைப் செய்கிற கடிதங்களைப் பார்த்து எனக்கு இவன் மேல் எவ்வளவு அபிமானம் ஏற்பட்டிருந்தது? எல்லாவற்றையும் சில விநாடிகளில் பாழாக்கி விட்டானே!

இவனுக்காக சுவிசர்லாந்திலுள்ள சிறந்த கம்பெனியிலிருந்து வாங்கி வந்த கடிகாரத்தைப் பரிசளிப்பதற்காக நான் ஆவலுடன் மேடைமேல் எழுந்திருந்து,"இந்தக் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து டைப்பிஸ்டாக இருந்து வரும்..” என்று நீட்டி முழக்கிக் கொண்டு தொடங்கியும். இவன் கூட்டத்தின் கோடியில் கடைசி நாற்காலியில் இருந்து எழுந்து மேடைக்கு வராமல் அடித்த முளை போல உட்கார்ந்திருந்து விட்டானே!

"ஏய் முருகேசு! உன்னைத்தானப்பா..” என்று கம்பெனி மானேஜர் இவனை அழைத்துக்கொண்டுவருவதற்காக எழுந்து சென்றபோது இவன்-இந்தப்பயல் என்ன செய்தான் தெரியுமோ? யாரோ தன்னைக் கொள்ளையடிக்க நினைத்துத் துரத்துகிறாற்போல் எண்ணிக் கொண்டவன்போலக் குபீரென்று எழுந்து பக்கத்து வாயில் வழியாக வெளியே ஒடிவிட்டான். கூட்டம் முழுதும் இதைப் பார்த்துச்