பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / 15-வது ஆண்டு அறிக்கை 499

சிரித்துவிட்டது. எனக்குத் தலை குனிவாகப் போய்விட்டது. ஒரு நிமிஷம் என் "ஸ்டேட்டஸ்' ஆட்டங் கண்டது. 'ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ்' என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை என் கீழ் வேலை பார்க்கும் ஸ்டேட்டஸ் இல்லாத சாதாரண ஊழியன் கூட ஆட்டங்காணச் செய்ய முடியும் என்று புரிந்தாற் போல இருந்தது. உடனே ஒரு விநாடியில் எனக்கு வேறொரு தீர்மானமும் தோன்றியது.

அப்படி இந்தப்பயல் எங்கேதான் ஓடி விடுவான்? மேடைக்கு எழுந்து வருவதற்குக் கூச்சப்பட்டுக்கொண்டு வீட்டைப் பார்க்க நடையைக் கட்டியிருப்பான்.

'காரை எடுத்துக்கொண்டு போய்த்துக்கிப் போட்டுக் கொண்டு வரச் சொன்னால் என்ன?' இப்படி நினைத்ததும் இந்த முருகேசன் பயலை அவ்வளவுக்குப் பெரிய மனிதனாக்குவதற்கு ஒன்றுமில்லை என்று அந்த யோசனையைக் கைவிட்டேன்.

“விடுங்கள் சார்! சுத்தத் திமிர் பிடித்த ராஸ்கல்! நாளைக்குக் கழித்துத் திங்கட் கிழமை ஆபீசுக்கு வருவான். 'எக்ஸ்பிளனேஷன்' எழுதிக் கேட்டு மானத்தை வாங்கிவிடுகிறேன்” என்று சீறினார் மானேஜர்.

"நோ, நோ! அதெல்லாம் செய்யப் படாது. திங்கட்கிழமை அந்த முருகேசன் வந்ததும் ‘உன்னை எம்.டி (மானேஜிங் டைரக்டர்) பார்க்கணும்னார். அவர் ரூமுக்குப் போய்ப் பார்’ என்று சொல்லி என்னிடம் அனுப்புங்கள் போதும். நான் கேட்டுக் கொள்கிறேன்.” என்று மானேஜரை சாந்தப்படுத்தினேன் நான். இந்த ஞாயிற்றுக் கிழமை 'மானுபாக்சரர்ஸ் அசோஸியேஷனில் ஒரு விருந்துண்டும், தொழிலதிபர்கள் தனிக் கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு செய்தும் புகழில் மிதந்த போது கூட என் மனத்தின் ஒரு கோடியில் அந்த முருகேசன் என்ற டைப்பிஸ்ட் என்னை மதிக்காமல் போன அணுப்பிரமாண நிகழ்ச்சிதான் உறுத்திக்கொண்டிருந்தது. என்னுடைய கண் பார்வை தன்மேல் ஒரு 'செகண்ட்'திரும்பினாலே வரம் கிடைத்த மாதிரித்துள்ளுகிற குமாஸ்தாக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? காற்றில் மிதந்து வருகிற கப்பல் மாதிரி இந்த கெடிலாக் காரில் ('கெடிலாக் காரே இந்த ஊரில் மூன்றுதான் இருக்கிறது. அந்த மூன்று காருக்கும் ஒரே உரிமையாளன் நான்தான்) நான் கம்பெனி வாசலில் போய் இறங்குகிறபோது எத்தனை கூழைக் கும்பிடுகள் என்னை வரவேற்கின்றன? அவற்றுக்கெல்லாம் மசியாமல் உண்மை உழைப்பாளி என்று நானே தீர்மானம்,செய்து 'இவனைத்தான் கெளரவப் படுத்த வேண்டும். இவனைத் தவிர வேறு யாரையாவது கெளரவப்படுத்தினால் கெளரவத்துக்கே கெளரவமில்லை’ என்று கூட்டம் தொடங்குகிற வரையில் பரம இரகசியமாக வைத்திருந்து மேடையில் திடீரென்று இந்த முருகேசனின் பெயரை நான் எழுந்திருந்து சொல்ல வந்த போது என்னையே 'இன்ஸல்ட் செய்துவிட்டானே இவன்! நான் திட்டமிட்டுப் பாராட்ட முயன்றதை இவனும் திட்டமிட்டு அவமானப்படுத்தினாற்போல் அல்லவா ஆகிவிட்டது? -

'ஆண்டு விழா மேடையில் நின்று கொண்டு முதலாளி நம் பேரைச் சொல்லி உற்சாகமாகக் கூப்பிடுகிறபோது இப்படி நழுவி ஓடுகிறோமே. நாளைக்குக் கோபித்துக்கொண்டு நம் சீட்டைக் கிழித்தால் என்ன செய்வது? என்ற பயம் கூடவா