பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


இந்தப் பயலுக்கு இல்லாமற் போயிருக்கும்? தைரியசாலியா இருந்தால் மேடை வரை வந்து எனக்கு உங்கள் பாராட்டும் பரிசும் தேவையில்லை’ என்று மறுத்திருக்க வேண்டும். அதையும் இவன் செய்யவில்லையே.

அதையும் தான் பார்க்கலாமே! திங்கட்கிழமை நாளைக்குத் தானே? நாளைக் காலை ஆபீஸ் தொடங்குமுன் 9.30 மணிக்கே நான் போய்விட வேண்டும். அப்படிப் போனால்தான் இந்த முருகேசனைத் தனியாக அழைத்து விசாரிக்க வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் இவனை அழைத்து விசாரித்தது ஆபீஸ் முழுவதும் பரவி விடும். முருகேசன் நான் போகிறபோது ஆபிசுக்கு வந்திருக்க வேண்டுமே என்ற கவலையே இல்லை. இந்தப் பதினைந்து வருடமாக அவன் சரியாக ஒன்பது மணிக்கே ஆபிஸுக்கு வந்துவிடுகிறான் என்று தெரிந்து அந்த ஒழுங்கையும் காலந் தவறாமையையும் பாராட்டுவதற்காகத் தானே ஆண்டு விழாவில் அவனுக்குப் பரிசளிக்கும் நினைவே எனக்கு வந்தது?

அப்பாடா! திங்கட்கிழமை விடிந்துவிட்டது. மணி 8-30. குளித்து உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டியும் ஆகிவிட்டது. செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கிறேன். குபேரா கெமிகல்ஸ்’ ஆண்டு விழாவைப் பற்றிப் பிரமாதமாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளிலும் என் படத்தைப் போட்டு நான் தொடங்கப் போகும் புதிய கடிகாரக் கம்பெனி பற்றியும் எழுதியிருந்தார்கள். அவசரக் குடுக்கையான ஒரு நிருபர், 'குபேராகெமிகல்ஸ் ஆண்டு விழாவில் ஊழியருக்குப் பரிசு வழங்கப்பட்டது' என்றும் எழுதியிருந்தார். 'பரிசு வழங்கல்’ ‘யாருக்கு யார்' என்று போடாமல் நிகழ்ச்சி நிரலில் நான் இரகசியமாகக் குறித்திருந்ததை வைத்துத் தானாக இந்தச் செய்தியைத் தயார் செய்திருக்க வேண்டும் அந்த நிருபர்!

"டிரைவர் காரை எடு: கம்பெனிக்குப் புறப்படலாம்.”

“நேரம் ஆகலிங்களே”

“நேரம் ஆகாட்டிப் பரவாயில்லை. இன்னிக்கு நான் சீக்கிரமே அங்கே போகனும்.”

"இதோ. சார்.”
'கெடிலாக் ஒசைப்படாமல் பங்களா போர்டிகோவில் வந்து நின்றது. நான் ஏறிக்கொண்டேன். கார் புறப்பட்டது.

கார் கம்பெனிக்குள் நுழைவதற்கு ஒரு பர்லாங் முன்னால் முருகேசன் செருப்பும் இல்லாத காலோடு நடைபாதை மேல் மெல்ல நடந்து சென்றுகொண்டிருப்பதைக் காருக்குள் இருந்தே நான் பார்த்து விட்டேன்.

"டிரைவர் காரை நிறுத்து." கார் நின்றது. நான் முருகேசனைக் கை தட்டி அழைத்தேன்.என் கைதட்டுதல் பல பேரைத் திரும்பிப்பார்க்கச்செய்து ஏமாற்றியபின் முருகேசனும் திரும்பிப் பார்த்தான். பதறிப்போய் பயபக்தியோடு ஒடி வந்தான்.