பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி 115-வது ஆண்டு அறிக்கை * 501

“ஆபீஸுக்குத்தானேபோறே?. முன்னாலே ஏறி உட்கார்ந்துக்கோ.”

"நீங்க போங்க சார். நான் நடந்தே வந்திடறேன்.”

“நீ கார்லே வரமாட்டியா?”

“அதுக்கில்லே சார். உங்களோடே. எனக்குக் கூச்சமா இருக்கு சார்.”

“ஆல் ரைட் ஆபீஸ் வந்ததும் நீ என்னை ரூம்லே வந்து பாரு. டிரைவர் போ...”

கார் முன்னேறியது. கார் ஆபீஸின் முன்புறம் வந்து நின்றதும் நான் இறங்கி ஏர்க்கண்டிஷன் ரூமுக்குள் போய் முருகேசனை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.


கடிகாரத்தில் ஒன்பது அடிக்க மூன்று நிமிஷம் மீதமிருந்தது. கோவில் கர்ப்பக் கிருகத்தில் நுழைகிற மாதிரி ஸ்பிரிங் கதவை மெல்லத் தள்ளிக்கொண்டு முருகேசன் என் முன்னால் வருகிறான். நான் நிமிர்கிறேன்.

"அப்படி உட்கார்”

"பரவால்லே சார்.”
அவன் உட்காரவில்லை.

“ஆமாம். அதென்ன அன்னிக்கி ஆண்டு விழாவிலே திடீர்னு அப்படிச் செய்தே? எல்லார் நடுவிலேயும் என்னைத் தலை குனியும்படி பண்ணிட்டியே அப்பா? நீ நியாயமா நடந்துக்கிறே என்றுதான் நான் உன்னைக் கெளரவிக்க முன்வந்தேன். பதிலுக்கு நீ என்னைக் கெளரவிக்காமே.”

“ஐயையோ சார். அப்படி எல்லாம் இல்லை. இதோ இங்கே பாருங்க. இந்த நாலுமொழம் வேஷ்டி அண்ணைக்கிக் கரைக் கட்டுலே கிழிஞ்சு மேல் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து. அசிங்கமாப் போச்சு.இரண்டு கிழிசல் நுனியையும் முடிச்சுப் போட்டுக்கிட்டு மறைச்சு உட்கார்ந்தேன். நீங்க கூப்பிட்டதும் எனக்குக் கூச்சமாயிடிச்சு. ஒடறதைத் தவிர... வேறெண்ணும் தோணலை. வேஷ்டி கிழியாம இருந்தாலும். நான் இந்தப் பரிசு, புகழ் எல்லாம் வாங்கிக்கறதை வெறுப்பவன்.”

நான் பார்த்தேன். அவன் வேஷ்டி கிழிசல், சட்டையிலும் அங்கங்கே கிழிசல்கள்.

“இப்படி எல்லாம் சிரமமாயிருந்தா எங்கிட்டச் சொல்லப் படாதோ?. நான் ஏதாவது செய்ய முடியுமோ..?”

“நமக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும். அதை யெல்லாம் இன்னொருத்தரிடம் சொல்லி முடியுமோ? நாமேதான் சமாளிக்கணும் மற்றவர்களுடைய அநுதாபத்துக்கு ஏங்கறது கூட நாகரிகமான கோழைத்தனம்தான். எனக்கு வர கஷ்டத்தை நானே கொண்டாடனும்கிறதுதான் எங்க பெரியவங்க எனக்குச் சொன்ன பாடம்.”

நான் அயர்ந்து போனேன். இவனா கோழை?இவனா அப்பாவி? இவனா சாது?
"அது சரி. ஆனா நீ நியாயமா நடந்துக்கிறதை நான் பாராட்டறது.”