பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


“உங்கபெருந்தன்மைன்னு நினைச்சுச் சந்தோஷப்படறேன் சார்! ஆனாநியாயமா நடந்துக்கணும்கிறதை முழு மூச்சா வைச்சு உழைக்கிறவன் அது பாராட்டப் படணும்னும் எதிர்பார்க்க வேணுமா? நான் எனக்காகத்தான் ஒழுங்காயிருக்கேனே தவிர நான் ஒழுங்காயிருந்தா யாராவது அதைப் புகழலாம் கிறதுக்காக ஒழுங்கா இருக்கிறதானால் புகழுக்கும் பரிசுக்கும் அப்புறம் ஒழுங்காயிருக்கனும்கிற அவசியமில்லீங்களே.”

மெல்ல நகர்ந்தன சில நிமிஷங்கள். மெளனம்.என்னிடம் வருகிறேன் என்று கூடச் சொல்லிக்கொள்ளாமல் மெல்ல நடந்து போய் விடுகிறான் முருகேசன். அவன் போன சில விநாடிகளுக்கு எல்லாம் 'குபேரா கெமிகல்'ஸின் விளம்பர ஆலோசகர் வந்து, இந்த ஆண்டு விழாவின் அறிக்கையையும் புதிய கம்பெனியின் தொடக்கத்தையும் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் தருவது சம்பந்தமாக என்னை அணுகுகிறார். எனக்கு மனம் வேறு எங்கோ இருந்தது.

ஆண்டு அறிக்கைக்குக் கீழே வெளியிட என் படம் வேண்டுமென்கிறார். நான் சுவரில் மாட்டியிருந்த குரூப் போட்டோ ஒன்றை எடுத்து அதில் ஒரு முகத்தைச் சுட்டிக் காட்டி, "நம்முடைய பதினைந்தாவது ஆண்டு அறிக்கையின் கீழ் இந்தப் படத்தைத் தனியே பிரித்து என்லார்ஜ் செய்து போட்டு விடுங்கள்.” என்கிறேன். விளம்பர ஆலோசகர் மலைத்துப் போய்க் கேட்கிறார்.

“இது யார் படம் சார்? அறிக்கையில் போடணும்னா ஒரு ஸ்டேட்டஸ்’ வேணுமே?”

“நீங்கள் சொல்கிற ஸ்டேட்டஸ் இவனைத் தவிர வேறு யாருக்கும் இங்கே இல்லை. எனக்குக்கூட."

விளம்பர ஆலோசகர் மிரள்கிறார். அந்த 15-வது ஆண்டு 'குபேரா கெமிகல்ஸ்’ ஆண்டு அறிக்கையில் முருகேசனுடைய படம் பத்திரிகைகளில் 'ஸ்தாபனத்தின் இலட்சிய ஊழியர்' என்ற பெயரோடு வந்த காரணம் ஒருவருக்கும் புரியவில்லை.

யாரோ முருகேசனிடமே கேட்டார்கள்.

"அப்படியா? எனக்குத் தெரியாதே" என்று சர்வ சாதாரணமாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.

(1961)