பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/505

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67. இவரும் ஒரு பிரமுகர்!

வருக்குப் பெயர் நித்தியானந்தம். நாள் தவறாமல் நாழிகை தவறாமல்-இன்னும் தெளிவாகச் சொல்லத்தான் வேண்டுமென்றால், விநாடி தவறாமல் துக்கமும், வேதனையும், வறுமையும் படுகிற, படுத்துகிற மனிதருக்கு நித்தியானந்தம் என்று பெயர் வைத்திருக்கக் கூடாதுதான். நஞ்சுள்ளதற்கு நல்ல பாம்பு என்று வைத்து விட்டது போல் இவருக்கு இப்படி வைத்தபின் என்ன செய்வது?

இவரைப் பெற்றவர்கள் அப்படி அன்றைக்கே இந்தத் தவறு செய்து விட்டார்கள். பெற்றதனால் அல்ல; பேர் வைத்தனால்தான். பையன் நித்தியமும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினாலும் இதைச் செய்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இவருக்குப் பேர் வைத்ததனால் தங்கள் பேரை அநாவசியமாகக் கெடுத்துக் கொண்டு விட்டார்கள் அந்தப் பெற்றோர்கள்.

நல்ல வேளையாக அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே காலமாகி விட்டதனால் நித்தியானந்தம் அவர்கள் பேரை ஏற்கனவே கெடுத்தது தவிர இனிமேல் புதிதாகக் கெடுப்பதற்கு ஒன்றுமில்லை. -

உயர் திருவாளர். நித்தியானந்தத்தை ரொம்ப நல்லவர் என்றும் சொல்ல முடியாது. ரொம்பக் கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்கிற மனிதரை ஒரு குறிப்பிட்ட குணத்துக்குள் எப்படி அடக்கி விட முடியும்? எப்படியெப்படியோ இருந்தாலும், மொத்தத்தில் அவர் ஒரு மனிதர் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

அப்படி மறுப்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். தாம் ஒரு தனி மனிதன் என்பதை நித்தியானந்தம் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. தாமே ஒரு ஸ்தாபனம் என்பது அவருடைய கருத்து. பலவிதமான இலட்சியங்களும், அலட்சியங்களும் நிறைந்த ஸ்தாபனம் அவர்.

இந்த ஸ்தாபனத்தின் மணிபர்ஸ் எப்போதும் நிறைந்திருக்கும். பணத்தினால் அல்ல, யார் யாரோ எழுதிக் கொடுத்த விலாசங்கள் நிறைந்த காகிதங்களாலும், கிழித்தெறியப்படாமல் மறந்துபோய் வைத்த பஸ் டிக்கெட்டுகளாலும், எதற்காக - எப்போது - யாரிடமிருந்து குறித்து வாங்கினோம் என்று தெரியாத சில்லறைக் காகிதங்களாலும்தான் நிரம்பியிருக்கும்.

இவற்றை எல்லாம் தவிர ரூபபேதம் தெரியாமல் மழு மட்டையாய்ப் போன செப்புக்காசு ஒன்றும் அந்த மணிபர்ஸின் ஒரு மூலையில் அநாதி காலந்தொட்டு