பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


இருந்து வருகிறது. அவருடைய நாணயம் தேய்ந்து போயிருப்பதற்கு அந்தக் காசு ஒர் அடையாளம்.

திரு.நித்தியானந்தம் அவர்களுக்கு என்ன உத்தியோகம் என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருப்பீர்கள். ஆனால் அது ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு இலேசுப்பட்ட உத்தியோகமில்லை என்று துணிந்து சொல்லலாம்.

பலபேருக்கு உத்தியோகம் தேடித்தருகிற உத்தியோகம் அவருடையது. அவரே ஒரு ஸ்தாபனம் என்று கூறியபோதே இதை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த ஸ்தாபனத்துக்கு அவர்தான் ஒரே நிர்வாகி.

ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்பது மணி வரை எழும்பூரிலும், கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிற நேரத்துக்கு சென்ட்ரல் ஸ்டேஷனிலும் நித்தியானத்தைப் பார்க்கலாம். நடுப்பகலில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிற நேரத்துக்கு அவரை சென்ட்ரலில் சந்தித்தீர்களானால் அதே தினம் காலையில் எழும்பூரிலே வந்திறங்கி மதுரை மனிதர் ஒருவருக்கு டில்லியில் ஆகவேண்டிய காரியத்துக்காகச் சொல்லி அனுப்ப ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

கடைசியில் ஒரு நாள் யாரோ ஒரு மந்திரியைத் தனக்குத் தெரியுமென்று சொல்லி யாரோ ஒரு மனிதரிடம் இவர் கொஞ்சம் செலவுக்கு வாங்கப் புறப்பட்டு அது பெரிய வம்பாகி வெளிப்பட்டுப் பத்திரிகைகளில் நாறி ஒர் ஆறு மாதம் தாமும் தமது ஸ்தாபனமுமாகக் கம்பியெண்ணுவதற்குப் போயிருந்தார். அந்த ஸ்தாபனத்தின் பதிவு செய்யப்படாத பெயர் 'பித்தலாட்டம் அண்டு பொய் மோசடி லிமிடெட்' என்பது அப்போதுதான் பலருக்குத் தெரிந்தது.

நிம்மதியாக ஆறு மாதம் வரை நானும், உலகமும் நித்தியானந்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தோம். மறுபடி அவர் வெளியே வந்ததும் எழும்பூரிலும் சென்ட்ரலிலும் அவரைப் பார்க்கலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் விடுதலையான மூன்றாவது நாளோ, நாலாவது நாளோ ஒரு பிரபல தினப்பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் வந்ததைப் பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"உங்கள் நிலையான எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் உடனே சுவாமி நித்தியானந்த யோகியை அணுகுங்கள். நேரில் பார்த்துப் பேச ரூ. 10. தபால் மூலம் 5. பலன்கள் அவசியம் பலிக்கும்” என்று விளம்பரம் போட்டுக் கீழே நித்தியானந்தத்தின் முகவரி இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு மனம் தாங்கிக்கொள்ள முடியாத ஆச்சரியம். நித்தியானந்தத்துக்குத் தன் எதிர்காலத்தைப் பற்றியே இன்னும் சரியாகத் தெரியாதே!

இந்த இலட்சணத்தில் மற்றவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லு வதற்குப் புறப்பட்ட தைரியம் எப்படிக் கிடைத்தது என்றுதான் நான் வியந்தேன். ஒரு நாள் நேரிலே போய்ப் பார்த்தே விடுவதென்று புறப்பட்டுப் போனேன். அதை ஏன் கேட்கிறீர்கள்? ஒரே அமர்க்களம் அமர்க்களத்தின் இடையேதான் நித்தியானந்த யோகியைப் பார்க்க முடிந்தது.