பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


பதில், அசல் மாயவரம் வெண்ணெய் விற்கப்படும்’ என்ற புதுப் போர்டு மாட்டியிருந்தது. எப்படியானால் என்ன? அவர் ஒரு ஸ்தாபனம்.

இப்போது நித்தியானந்தம் தாடியை எடுத்துவிட்டு மீசையை மட்டும் வளர்த்திருந்தார். "எதிர்கால பிஸினஸ் என்ன ஆச்சு? கடைசியில் இப்படி வெண்ணையில் கை வைக்கும்படி ஆகிவிட்டதே?” என்று கேட்டேன் நான். அவர் மெல்லச் சிரித்தார்.

“இப்பொழுதெல்லாம் எதிர்காலத்தை யாரும் நாடுவதில்லை. ஏதோ தோன்றியது. உடனே வெண்ணெய்க் கடை வைத்துவிட்டேன். தினம் பத்து ரூபாய்க்குக் குறையாமல் இலாபம் கிடைக்கிறது” என்றார் நித்தியானந்தம்.

மீண்டும் நாலைந்து வாரத்துக்குப் பின் நித்தியானந்தம் மறுபடி கைதாகிச் சிறை சென்றதாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. செய்தியைப் படித்தேன். வெண்ணெய் விற்பதாகப் போர்டு மாட்டிவிட்டுச் சாராயம் விற்றால் சும்மாவா விடுவார்கள்?

வெளியே போர்ட்டில் போட்டிருப்பதைத்தான் விற்க வேண்டுமென்ற குறுகிய நோக்கம் நித்தியானத்துக்கு இருந்ததில்லை. நித்தியானந்தத்தின் பரந்த நோக்கம் போலீஸாருக்குப் புரியவில்லை. இந்தத் தடவை அவருக்கு இரண்டு வருடம் சிறைவாசம் கிடைத்தது. சிறைக்குள் இருக்கும்போதும் அவர் ஒரு ஸ்தாபனமாக இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பின்பு இரண்டு வருடத்துக்கு நானும், உலகமும் நிம்மதியாக இருந்தோம்.

பொழுதும் காலமும் எந்த ஊரில் எப்படி வேகமாக ஒடுகிறதோ, இந்தப் பட்டினத்தில் அது சூப்பர் ஜெட் வேகத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இரண்டு வருடமும் கழிந்து ஆறுமாதமும் மேலே ஆகிவிட்டது. பாரத நாட்டில் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் மாலை நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது அந்தப் பக்கத்தில் ஏதோ ஒரு பொதுக்கூட்டம் நடப்பதைப் பார்த்து யார்பேசுகிறார்கள் என்று கேட்கிற ஆவலோடு போனேன். கூட்டம் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்:"இதோ இங்கு அமர்ந்திருக்கும் நமது பேச்சாளர் 'எப்போதும் மகிழ்வார் நாட்டுக்காகப் பன்முறை சிறை சென்று துயருற்ற பெருமகனார்.வாழ்வில் இப்பெருந்தகையாளர் அனுபவிக்காத துன்பங்கள் இல்லை.” என்று அறிமுகப்படலம் தொடர்ந்தது.அந்தப்பெருந்தகையாளர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலால் உந்தப் பெற்று மேடையருகே சென்றேன்! என்ன ஆச்சரியம்! திருவாளர். நித்தியானந்தம் அவர்கள்தான் கழுத்து நிறைய மலர் மாலை சூடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அடப்பாவமே பேரைக்கூட அல்லவா எப்போதும் மகிழ்வார்’ என்று மாற்றிக் கொண்டு விட்டார்? அன்று நித்தியானந்தனராகிய பெருமகனாரின் சொற்பொழிவு முழுவதையும் கேட்டேன். செத்துப்போன பத்தாம் பசலிக்கொள்கைகளைச் சீரிய கூரிய நடையில் முழங்கினார் எப்போதும் மகிழ்வார். அதைக் கேட்டு மகிழவில்லையானாலும் கூட்டம் கலைந்ததும் அன்னாரைத் தனியே