பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி இவரும் ஒரு பிரமுகர்! * 507

சந்திக்க ஆவல் கொண்டுமேடையருகே சென்றேன்.பலர் நடுவே நான் அவரைப் பற்றி விசாரித்து மானத்தைக் கப்பலேற்றிவிடப் போகிறேனோ என்று பயந்த அன்னார் என்னோடு கீழே இறங்கித் தனியாக வந்துவிட்டார். "என்ன? புது 'பிஸினஸ்’ ஆரம்பித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது?”

"ஆமாம்! முன்னால் பிரமுகர் வேலை ஸைடு பிஸினஸ் ஆக மட்டும் இருந்தது. இப்போது முழுநேரப் பிரமுகர் ஆகிவிட்டேன்” என்றார் அன்னார் அவர்கள்.

“செய்ய வேண்டியதுதானே? இப்போதெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு ரொம்ப லாபகரமான வியாபாரம் பாலிடிக்ஸ்'தான்.”

"வாருங்கள்! நுங்கம்பாக்கம் நாயர் கடையில் டீ குடித்து நாளாச்சு.” என்று அழைத்தார் நித்தியானந்தம். எனக்கும் அவருடைய அழைப்பை மறுக்கத் தோன்றவில்லை. ஒரு பிரமுகருடைய அழைப்பை யாராவது மறுப்பார்களா? இருவருமாக நாயர் கடைக்குப் போனோம். டீ தயாராகிறவரை பல விஷயங்களைப் பேசினோம். ஒரு பிரமுகரோடு பேசுவதில் சுவாரஸ்யம் அதிகமாயிற்றே!

டீ வந்தது, குடித்தோம், நாயருக்குக் காசு கொடுக்க வேண்டிய சமயத்தில் பையைத் தொடப்போனதன் கையை அப்படியே அந்தரத்தில் திருப்பிக் கொண்டு, நீங்கள்தான் என்று என் தலையில் சுமத்திவிட்டார் நித்தியானந்தம். நான்தான் நாயருக்குப் பணம் கொடுத்தேன். வெளியே வந்ததும், “என்ன சார் முழு நேரப் பிரமுகர் ஆன பின்பும் உங்கள் மணிபர்ஸ் நிலைமையில் மாறுதல் ஒன்றும் இல்லை போலிருக்கிறதே?” என்று கேட்டேன். அவர் வறட்சியாகச் சிரித்தார்.

"இதோ நீங்களே பாருங்களேன். இதில் அன்றிலிருந்து இன்றுவரை இருப்பது இதுதான்” என்று அவருடைய மணிப்பர்ஸை என் கைக்கு நேரே தலை குப்புறத் தூக்கிக் கவிழ்த்தார் நித்தியானந்தம். அந்தப் பழைய செப்புக் காசு என் கையில் விழுந்தது. அந்த நாணயம் இப்போது முன்னைவிடத் தேய்ந்திருந்தது. நான் குறும்பாகச் சிரித்துக்கொண்டே அவரைக் கேட்டேன்.

“உங்கள் நாணயம் படிப்படியாகத் தேய்ந்து கொண்டே வருகிறது சார்” "வாஸ்தவம்தான். ஆனால் அதில் இன்னும் தேய்வதற்கு இடமிருக்கிறது என்பதுதான் நான் மகிழ்வதற்குக் காரணம்” என்று பதில் கூறினார் அவர்.

(தாமரை, பொங்கல் மலர், 1962)