பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/510

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68. அர்த்தம் பிறந்தது

தோ தொலைவில் தெரிகிறதே, அந்த நீலச் சிகரத்தின் அழகு நுனி, அதோடு இந்த மலையின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதற்கு அப்புறம் என்ன ஆரம்பமாகிறது என்று கேட்பதில் பயனில்லை. ஒன்று முடிந்தால், இன்னொன்று ஆரம்பமாகிக் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒன்று முடிவதும், அந்த முடிவையே மறு புறமாகக் கொண்டு மற்றொன்று தோன்றுவதும் உள்ளங் கையைத் திருப்பிக் காட்டினால் புறங்கையாகத் தெரிவது போலத்தான்.

ஆனால் எமரால்ட் காப்பி எஸ்டேட் உரிமையாளர் புஜங்கராவைப் பொறுத்த வரை இந்தத் தத்துவத்தில் ஒரு பகுதிதான் உண்மை. மங்களூரிலிருந்து உதகமண்டலத்துக்குக் குடியேறி வாழத் தொடங்கி விட்ட இந்தப் பதினைந்து வருட வாழ்க்கையில் அவர் அநுபவித்தும், கண்டும் உணர்ந்த எத்தனையோ முடிவுகளிலிருந்து எந்த ஆரம்பமும் முளைக்கவில்லை, எந்தக் கிளையும் தோன்றிக் கிளைக்கவில்லை.

இங்கே, இதோ, இப்பொழுது இந்தப் பனிக்காலத்து மாலையில் உட்கார்ந்து கொண்டு கண் பார்வைக்கு எட்டுகிற கடைசிச் சிகரம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறாரே, இதே காரியத்தை எமரால்ட் எஸ்டேட்டின் பங்களா முகப்பிலிருந்து கடந்த நாலாயிரத் தெண்ணுாறு நாட்களுக்கு மேலாகத் தவறாமல் செய்து கொண்டிருக்கிறார் அவர். நாலாயிரத்தெண்ணுறு நாட்களுக்கு மேலாக அல்லது பதினைந்து ஆண்டுகளாக நடுவில் லீப் வருடங்களும் வந்திருக்கலாம் - ஆனால் அது அவருக்குத் தெரியாது. இந்த நீல மலைச் சிகரங்களுக்கு அப்பால் காலம் என்று ஒரு பொருள் நகர்ந்து ஓடியிருப்பதாகவே அவருக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாக இந்த இடத்திலிருந்து அவர் பார்வைக்குத் தெரிந்த ஒரே முடிவு அந்தச் சிகரம்தான். அதற்கு அப்பால் அவருக்கு எதுவும் தெரிந்ததில்லை. அசோகமரத்தின் பச்சை இலை ஒன்றைப் பெரிதாக்கி நிறுத்தினாற்போல் செங்குத்தாக நிற்கிறதே அந்தச் சிகரத்தின் நுனியோடு அவருடைய பார்வையும் நினைவும் ஒருசேர ஒடுங்கி முடிந்து விடும். முடிந்து விடும் என்பது முக்கியமில்லையானாலும் அதற்கப்பால் படராதென்பது முக்கியம்.

‘குறிக்கோள் குறிக்கோள்’ என்று அடித்துக் கொள்கிறார்களே அதுதான் என்ன? ‘இதைச் செய்தே தீருவது’ என்று எதையாவது ஒன்றை உறுதியாகக் குறிக் கொள்வதுதானே குறிக்கோள்? பரம் பொருளோடு ஒன்றுவதைக் குறியாக வைத்துக் கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்து தவம் செய்யும் துறவி, இலாபத்தைக் குறியாக