பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / அர்த்தம் பிறந்தது * 509

வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரி இவர்கள் எல்லாரையும் போல எந்த ஒரு சித்தியையும் நினைக்காமல் எந்த ஒர் இலாபத்தையும் கருதாமலே அந்தச் சிகரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஒன்றேகால் டஜன் வருடங்களைக் கழித்திருக்கிறார் புஜங்கராவ். அந்தக் குறிக்கோளில் அவர் ஒரு நாள் கூடத் தவறியதில்லை. வெம்மையறியாத பசுமைப்பட்டாடையுடுத்தி எண்ணத் தொலையாத வண்ணப் புதுப்பூக்களினால் கண்ணைச் சிமிட்டிப் புன்னகை பூத்துக் கொண்டே உயரத்தில் வீற்றிருக்கும் கந்தர்வப் பெண்ணைப் போல் கொலுவிருக்கும் பேரரசியான நீலகிரி நங்கையின் வாழ்க்கையில் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ புதுமைகள், எத்தனையோ மாறுதல்கள், எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. நேற்று வரை உருளைக் கிழங்கு வயலாயிருந்த இடத்தில் இன்றைக்குப் பங்களாக் கட்டிடம் தெரிகிறது. மஞ்சக் கெளடர் புதிய கிழங்கு சாகுபடிக்கு முள்ளுப் போட்டுக் கொண்டிருக்கிறார். சென்ற மாதம் வரை ஸ்டேன்சுக்கும் நார்மன் துரைக்கும் சொந்தமாயிருந்த கிரீன்பீல்ட் எஸ்டேட்டை வயநாட்டு நாயர் ஒருத்தர் விலைக்கு வாங்கி விட்டார். யூகலிப்டஸ் எண்ணெயையும் தம்முடைய 'சாமர்த்தியத்தையும் சேர்த்துக் கண்ணாடிப் புட்டியில் அடைத்துப் பணம் பண்ணிக் கொண்டிருந்த மேட்டுப் பாளையத்துச் செட்டியார் ஒருவர் ரேஸ்கோர்சுக்கு எதிர்த்தாற் போல் மேட்டில் பிளஷர்லாட்ஜ்’ என்று ஒட்டல் வைத்து விட்டாராம். இனிமேல் இந்த உதகமண்டலத்தில் பிளஷர் (சந்தோஷம்) வேறு எங்கேயாவது மீதமிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்!

ஆனால், இந்த மாறுதல்கள் எல்லாம் புஜங்கராவின் குறிக்கோளைக் கலைத்துவிடவில்லை. அவருடைய மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது. காரணம்? மற்றவர்கள் மகிழ்ச்சியடைய முடியாத அல்லது மகிழ்வதற்கு இதில் என்ன இருக்கிறது?’ என்று மிக விரைவில் சலித்துப் போகக் கூடிய ஒன்றைப் பார்த்து அவர் மகிழ்ந்து கொண்டிருந்தார். அது அவர் மனத்துக்குப் பழகிப் போன அநுபவம். மற்றவர்கள் சொல்கிற மாதிரிச் சொன்னால் பழகிப் போன அசட்டுத்தனம்.

அந்தக் கருநீலச் சிகரத்துக்கு முன்னாலும் பல சிறிய சிகரங்கள் இருந்தன. பின்னாலும் சில இருக்கலாம்.ஆனால் அவரைக் கவர்ந்தது அந்த ஒரே ஒரு சிகரம்தான். அது மட்டும் அவரைக் கவர்ந்ததற்கு எப்படிக் காரணம் கண்டு பிடித்துச் சொல்ல முடியாதோ அதேபோல மற்றவை ஏன் அவரைக் கவரவில்லை என்பதற்கும் காரணம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது. அவருடைய எஸ்டேட் பங்களாவின் முகப்பில் அவர் வழக்கமாக உட்காரும் இடத்திலிருந்து பார்த்தால் அதுதான் பெரிதாக எதிரே தெரிந்தது. அதனால் அதுவே அவரைக் கவர்ந்திருக்கலாம் என்று நாமாக அநுமானம் செய்ய முடியும். ஆனால் புஜங்கராவ் அந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்.

அதற்குக் காரணம் என்று ஒன்றைக் கற்பிக்க முயல்வதையே ஒப்புக் கொள்ளாதவர் காரணத்தை எங்கே ஒப்புக் கொள்ளப் போகிறார்? எமரால்ட் எஸ்டேட்டின் சுற்றுப்புறத்தில் அவருக்கு எத்தனையோ நண்பர்கள் இருந்தனர். அவரைப் போலவே அவர்களும் காப்பி, தேயிலைத் தோட்டங்களின் முதலாளிகள். அவர்களில் சார்ல்வுட்