பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


என்று ஒர் ஆங்கிலேயர் இருந்தார். அவர் புஜங்கராவின் எஸ்டேட்டுக்குப் பக்கத்து எஸ்டேட்காரர். அந்த ஆங்கிலேயர் சில மாலை வேளைகளில் புஜங்கராவைச் சந்திப்பதற்கு வருவார். சார்ல்வுட் எதைப் பற்றியாவது சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிற போதுகளில் கூடப் புஜங்கராவின் செவிகள்தாம் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கும். அவருடைய இடுங்கிய சிறிய கண்களோ அந்தச் சிகரம் முடிகிற நுனியில் இருக்கும். ஒரு நாள் சார்ல்வுட் பொறுமையிழந்து புஜங்கராவிடம் இதைப் பற்றிக் கேட்டே விட்டார்.

"வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்று தொடங்கித் தாம் அவரைப் பார்க்கிற போதெல்லாம் அவர் அப்படியே இருந்து வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேலி செய்தார் சார்ல்வுட், புஜங்கராவ் அந்தக் கேலிக்கும் பதில் சொல்லவில்லை. புன்முறுவல் பூத்தார். அப்படிப் புன்முறுவல் பூத்தபோதும் அவருடைய கண்கள் வழக்கமான இலக்கில்தான் இலயித்திருந்தன. இதனால் சற்றே கோபமடைந்துவிட்ட அந்த ஆங்கில நண்பர், அர்த்தமில்லாமல் எதையாவது பார்ப்பது சோம்பேறித் தனத்துக்கு அடையாளம்’ என்ற கருத்தைக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் தொடுத்துப் பொரிந்து தள்ளினார். நண்பரின் கோபத்தைக் கண்டு மேலும் சிரித்துக் கொண்டே தமது பார்வையைத் திருப்பாமலே ஒரு கேள்விகேட்டார் புஜங்கராவ்.அ மிகவும் ஆழமான கேள்வியாயிருந்தது.

"மிஸ்டர் சார்ல்வுட் அர்த்தம் அர்த்தம் என்று சொல்கிறீர்களே, அதுதான் என்ன? அர்த்தத்தின் அர்த்தத்தை முதலில் சொல்லுங்கள்.” “இதற்குப் பதில் குழந்தைக்குக் கூடத் தெரியுமே மிஸ்டர் ராவ்! ஒரு வார்த்தையினால் குறிக்கப்படும் பொருள் அல்லது பயன் எதுவோ அதுதான் அதற்கு அர்த்தம்”

“நல்லது! இந்த உலகம் தோன்றிய முதல் ஊழியின் முதல் விநாடியான யுகாரம்பத்தில் வார்த்தைகள் மட்டுமே பிறந்தன என்றும் அர்த்தங்கள் அதற்குப் பின்பே உண்டாயின என்றும் உங்கள் பைபிளில் சொல்லியிருக்கிறார்களே. அது உங்களுக்கு நினைவிருக்கிறதோ?” என்று கேட்டார் புஜங்கராவ்.

"தாராளமாக நினைவிருக்கிறது!”

“அதைப்போல்தான் இந்தச் சிகரத்தைப் பார்க்கத் தொடங்கிப் பதினைந்து வருடங்கள் ஆகியும் இந்த நோக்கு இன்னும் அர்த்தம் பிறவாத வெற்று வார்த்தையாகவே இருந்து வருகிறது.நமக்கு அர்த்தம் தெரியாத வார்த்தையை உயர்ந்த வார்த்தையை (அதன் அர்த்தம் நமக்குத் தெளிவாகத் தெரியாத உயரத்தை' உடையதென்று அறிந்திருந்தும்) நாம் காதலிப்பது உண்டா இல்லையா? இயற்கையின் அநுபவங்களைப் பற்றி அகராதியைப் போல் யாராவது இதற்கு இது அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறார்களோ? அர்த்தம் வார்த்தையைப் பொறுத்ததல்ல. அதனால் பின்பு எப்போதோ ஏற்படுவதற்கு இருக்கிற விளைவைப் பொறுத்ததுதான்.”