பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


கவர்ச்சிகரமான கருநீலம் கலந்த அந்த மலைப் பிரதேசத்துப் பசுமையில் மனத்தைக் கொள்ளை கொடுத்த வெள்ளைக்காரன் ஒருவன் அகராதியிலுள்ள வார்த்தையையும் தன் மனத்தில் இருந்த கவித்துவத்தின் ஆசையையும் சேர்த்து அந்த இடத்தில் பெயராகச் சூட்டியிருந்தான். அந்த இடத்துக்குச் சூட்டியதால் அந்தப் பெயரின் பெருமையையே அதிகப்படுத்தியிருந்தான்.

‘எமரால்ட் - மரகதப் பச்சை’.

‘கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேடும் பள்ளமுமாகப் பச்சைப் பட்டுடுத்தித் தன்னிச்சையாய்க் கிடந்து தூங்கும் பெண்ணழகிபோல் தெரியும் இந்த மலைப் பகுதி எல்லாம் நிஜமாகவே மரகதமாயிருந்தால் எந்த இரத்தின வியாபாரியாவது இதற்கு விலை கணிக்கமுடியுமோ?’ என்று முதல் முதலாக அந்த எஸ்டேட்டுக்கு அப்பா தன்னை அழைத்துக்கொண்டு சென்றபோது தன்னுடைய பதினேழாவது வயதில் இளைஞன் புஜங்கராவ் அந்த மலைப் பகுதியைப் பார்த்து நினைத்தான். பதினாலாவது வயதில் தான் படித்திருந்த, ‘எமரால்ட்’ என்னும் பதத்துக்கு அகராதியில் எழுத முடியாத பரந்த அர்த்தத்தை அப்போதுதான் கண்ணாரக் கண்டான். அகராதியில் ஒரு வார்த்தைக்கு இருக்கிற அர்த்தத்தைவிட அந்த வார்த்தை குறிப்பிடுவது எதுவோ அதையே அனுபவிக்கிறவன் உணர்கிற அர்த்தம் மிகவும் அதிகமானதென்று அவருக்குத் தோன்றியது.

இப்படியெல்லாம் நினைத்த மனம் கால் நூற்றாண்டுக்கு முற்பட்ட இளைஞன் புஜங்கராவினுடையதுதான். பங்களூரிலும் மைசூரிலும் பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் படித்த காலத்து புஜங்கராவ் வேறு பிரேஸிலுக்குப் போய் இரண்டு மூன்று வருடங்கள் அங்கே தங்கிவிட்டுத் தாய் நாடு திரும்பிய புஜங்கராவ் வேறு. பிரேஸிலில் கற்ற தோட்டத்தொழில் நுணுக்கங்களால் அறிவும், முன்பின் தெரியாத வெள்ளைக்கார யுவதியின் மனத்தில் ஆசையைக் கற்பித்ததால் நேர்ந்த புதிய உறவும், இறுதியில் அந்த உறவு அழிந்த வெறும் நினைவும் கொண்டு தாய்நாடு திரும்பிய புஜங்கராவ் வேறு.

பதினேழு வயதில் பார்த்த அதே பசுமை இன்னும் இன்றும் ‘எமரால்டில்’ இருக்கத்தான் இருந்தது. ஆனால் புஜங்கராவின் மனத்தில் பசுமை குறைந்திருந்தது. இளமையில் தெரிந்தது போல அந்தப் பசுமைக்கும் அதைக் குறித்த பெயருக்கும் விசேஷமாக எந்த அர்த்தமும் அவருக்குத் தெரியவில்லை. இங்கே திரும்பிய நாளிலிருந்து அவருக்குத் தெரிகிற ஒரே காட்சி அந்தச் சிகரம்தான். அதற்கும் இன்றுவரை அர்த்தம் தெரியவில்லை. சாதாரணமாக அர்த்தமே தெரியாதபோது விசேஷமாக எப்படி அர்த்தம் தெரியப்போகிறது?

அர்த்தமில்லாமலே எதையாவது தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சோம்பேறித்தனத்துக்கு அடையாளம் என்கிறார் சார்ல்வுட் ஆனால் அதிலிருந்தும் ஏதாவது ஓர் அர்த்தம் என்றாவது ஒருநாள் பிறக்கும். பிறக்கிற வரை அதைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்கிறார் புஜங்கராவ். பத்து நிமிஷங்களுக்கு ஒரு டீயும் மூன்று நிமிஷங்களுக்கு ஒரு சிகரெட்டுமாகக் குடித்துத் தீர்த்துக் கொண்டே