பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / அர்த்தம் பிறந்தது 513

சாயங்காலம் மூன்று மணியிலிருந்து இருட்டுகிற வரை ஒரே திசையில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற மனிதரைச் சார்ல்வுட் சோம்பேறி என்று கூறியது கூட நியாயமாகவே இருக்கலாம். ஆனால் புஜங்கராவ் அதை ஒப்புக்கொள்ளமாட்டார். காலையில் பதினோரு மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை நானூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள எமரால்டு காப்பி எஸ்டேட்டின் ஆபீஸ் நிர்வாகத்தைச் சுறுசுறுப்பாக அவர் கவனிப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்களே; அந்த வேளையில்தான் தமக்குப் பிடித்தமில்லாத எதையோ மந்தமாகவும், மெதுவாகவும் தாம் செய்து கொண்டிருப்பதாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையில் தாம் சுறுசுறுப்பாக இருப்பதாக அவர் உணர்கிற நேரம் எது தெரியுமோ?

ஒவ்வொரு நாளும் மாலை மூன்று மணியிலிருந்து இருட்டுகிற வரை ஒரு வேலையும் செய்யாமல் பங்களாவின் முகப்பில் உட்கார்ந்துகொண்டு கண் பார்வை விலகிவிடாதபடி அந்தக் கடைசிச் சிகரத்தை அர்த்தமில்லாமல் பார்த்து அனுபவிக்கிறாரே, அதுதான் அவர் சுறுசுறுப்பான காரியத்தைச் செய்வதாய்த் தமக்குத் தாமே உணர்கிற நேரம்.

சுருள் சுருளாய் வெண் மேகங்கள் சுருட்டிக்கொண்டு படர்கின்ற சில கார் காலத்துப் பிற்பகல் வேளைகளில் வில்லிவோட் ஹவுஸ் தன் சிவப்பு வெல்வெட் உதடுகளில் சிரிப்பு அரும்பப் பொன் நிறக் கூந்தல் தோள் பட்டைகளிலே சுருள் சுருளாய்ச் சரிய அவருடைய நிகழ்காலக் கற்பனை அவளுக்கு அணிவித்துப் பார்க்க ஆசைப்பட்ட இந்திய உடையில் அந்தச் சிகரத்தின் உச்சியில் அது முடியுமிடத்தின் மேல் கால்கள் பாவாமல் வந்து நிற்பதைப் போல் அவருக்குத் தோன்றும். ஆனால் அப்படித் தோன்றுவதிலும் அர்த்தம் ஏதும் இருப்பதாக அவர் உணரவில்லை. மேகக் கற்றைகள் முடிகிற இடத்தின் கோடுகளில் தங்கத்தை உருக்கிப் பூண் பிடித்தாற்போல் கதிரொளி படர அந்தச் சிகரம் பொன் மலையாய்ப் பிரகாசிக்கிற கார் காலத்து மாலைகளில் அதை விடப் பிரகாசமான நிறத்தோடு அவருடைய காதலி அங்கே வந்து அதன் உச்சியில் சிரித்தபடி நின்றுகொண்டிருப்பாள். அதற்கும் அர்த்தமில்லை. விஷயமே கற்பனையாக இருக்கும்போது சத்தியமான அர்த்தம் எப்படி அதிலிருந்து பிறக்க முடியும்? அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்து தேவலோகம் மிகவும் சமீபமோ என்று இந்த நாற்பத்தேழாவது வயதில் பதின்மூன்று வயதுப் பையனின் நினைவு அவருக்கு வருவதுண்டு. அந்த நினைவுக்கும் அர்த்தமிருக்காது. ‘எமரால்ட்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டு அதுபவித்தபோது பதினேழு வயதில் முதிர்ந்த பக்குவமான கற்பனை அவருக்கு ஒரு காலத்தில் வந்ததுபோல் இப்போது நாற்பத்தேழாவது வயதில் பதின்மூன்று வயதுப் பிள்ளைத்தனமான கற்பனை வருகிறது. பக்குவமும் முதிர்ச்சியும் இல்லாமல் குழந்தை நினைப்பாக வருகிறது. ஒன்றும் உடுத்துக்கொள்ளாமல் ஒன்றும் புனைந்து கொள்ளாமல் குழந்தை வருவதுபோல் தன் மேனியோடு வருகிறது. தன் மேனியோடு வருகிற கற்பனைக்கு அர்த்தம் இருக்க முடியாதுதான். பிரேஸிலில் இறந்துபோன லில்லி வோட் ஹவுஸ் நீலகிரியில் வந்து தோன்றுவதற்கு அர்த்தம் ஏது?
நா.பா.I - 33