பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


யட்சன் தன் காதலிக்கு மேகத்திடம் தூது சொல்லியனுப்பியதாகக் காளிதாசன் பாடியிருப்பதுபோல் அந்தச் சிகரத்தின் நுனியில் வந்து கூடுகிற் பரிசுத்தமான மேகங்களிடம் தேவலோகத்திலே போய்ச் சொல்லும்படி லில்லி வோட் ஹவுஸுக்கு ஏதாவது சொல்லி அனுப்பவேண்டும்போல் அவருக்குத் தோன்றும். ஆனால் மறுகணமே அப்படிச் செய்ய நினைப்பதில் அர்த்தமில்லை என்று புத்தி மேலெழுந்து அவரை அடக்கிவிடும்.

அந்தச் சிகரம் இருக்கிறதே; அது ஒவ்வொரு பருவ காலத்தில் ஒவ்வொரு விதமாக நிறம் மாறி அழகு காட்டும். கரு நீலக் கவர்ச்சி ஒரு சமயம், கரும் பசுமைக் கவர்ச்சி ஒரு சமயம். வயலட் மை ― அதாவது காப்பிங் பென்சிலை நீரில் குழப்பினாற் போன்ற நிறத்தோடு கூடிய கவர்ச்சி ஒரு சமயம், சாம்பல் நிறங்கலந்த பசுமை ஒரு சமயம். இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத எத்தனை எத்தனையோ நிறச் சேர்க்கைகள் அந்தச் சிகரத்தின் பருவகாலத் தோற்றங்களிலிருந்து தான் நிறங்களைப் பற்றிய நினைப்பே அவருக்கு இன்னும் மறந்துவிடாமல் இருந்தது.

பளீரென்று வயலெட் மை உருகி வழிவதுபோல் அந்தச் சிகரம் காட்சியில் தென்படுகிற சில நாட்களில் எப்போதோ ஏதோ ஆங்கிலப் புத்தகத்தில் படித்திருந்த ஒரு காதல் கவிதையிலிருந்து இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும் அவருக்கு நினைவு வரும். அதில் அந்தப் பெண்ணின் இதழ்களை வருணிக்க ‘ஸில்க்கன் லிப்ஸ்’ பட்டுமயமான உதடுகள் என்ற பதங்களை அதைப் பாடிய கவி பயன்படுத்தியிருந்தான். அந்தப் பதங்களின் அர்த்தம் அவருக்கு நினைவு வருகிற விநாடிகளில் அந்தச் சிகரத்தின் உச்சியில் மிக நளினமாய் மடிந்து பனி முத்துப் புரளும் இரண்டு செம்பட்டு ரோஜாப்பூவின் இதழ்கள் தோன்றிச் சிறிது சிறிதாக வளர்ந்து அந்த இடத்தில் லில்லிவோட் ஹவுஸ் எழுந்து உருவாகிநிற்பாள்.அந்தத் தோற்றம் மறைந்தவுடன் அந்த வார்த்தைகள் அந்த நினைப்பு யாவும் அர்த்தமின்றி மறைந்துவிடும். கடைசியில் புஜங்கராவும் அவருடைய அந்தச் சிகரமும்தான் அர்த்தமில்லாத வார்த்தைகளாய் அங்கே மீதமிருப்பார்கள்.

இனிமேலும் லில்லிவோட் ஹவுஸைப் பற்றி நினைப்பதே அசட்டுத்தனமல்லவா? அவள்தான் இன்றைக்குப் பதினாறு வருடங்களுக்கு முன்பே கார் விபத்தில் மாண்டுபோய் விட்டாளே? பதினாறு வருடங்களாக ஒரே பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பது பெரிய காரியம்தான். அதுவும் அவள் இறந்துபோன பின்பும்? மனிதர்களிலும் இராமர்கள் இருக்கிறதைத்தானே காட்டுகிறது இது! வாழ்நாள் முழுதும் ‘பிற மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று ஒரே பெண்ணைத் தவிர வேறு யாரையும் நினைக்காததனால்தான் இராமனுக்குக் காவியப்பெருமை..அப்படி நினைத்து விட்டதுதான் இராவணனுக்குச் சிறுமை. புஜங்கராவ் எந்தக்காவியத்துக்கும் நாயகனாவதற்கு விரும்பவில்லை. பிரேஸிலில் லில்லிவோட் ஹவுஸுக்கு நாயகனாக இருந்தபோதே தாம் ஒரு நடமாடும் காவியத்துக்கு நாயகனாக இருந்ததாகத்தான் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். தம்முடைய வாழ்க்கையில் அவர் ஒரே ஒரு முறைதான் மிகச்சிறந்த காவியத்தை அனுபவித்திருக்கிறார். பொன் அவிழ்ந்து கொட்டுகிறாற்