பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

516நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

ஏதும் அவர்களுடைய வரவினால் அவருக்குப் புரிந்ததில்லை. புரிந்ததாக அவர் உணர்ந்ததும் இல்லை. அவர்கள் ஊர் திரும்பி விட்டால் வழக்கம்போல் அந்த நீலச் சிகரத்தின் நுனியோடு அவருடைய நாட்களும் நினைவுகளும் முடிந்துவிடும். எப்போதாவது மிஸ்டர் சார்ல்வுட் ‘வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்று கேட்டுக்கொண்டே புஜங்கராவின் பங்களாவுக்குள் நுழைந்து அவர் தருகிற தேநீரைக் குடித்துவிட்டு அவரையே சோம்பேறி என்று திட்டிய பின் விடை பெற்றுக்கொண்டு வாக்கிங் போய்விடுவது வழக்கம். வருடக் கணக்கில் ஒரே பங்களாக் காம்பவுண்டை விட்டு வெளியேறாமல் இருக்கிற மனிதனைப் பார்த்து யாருக்குத்தான் அருவருப்பு ஏற்படாது? எமரால்ட் எஸ்டேட்டின் புரொப்ரைட்டர் ஒரு பைத்தியம் என்ற தீர்மானத்தை மிஸ்டர் சார்ல்வுட் மார்டின் நீண்ட நாட்களுக்கு முன்பே செய்துகொண்டு விட்டாலும் அந்த மலைக் காட்டில் ‘குட்மார்னிங் குட்மார்னிங்’ சொல்லிக் கொள்வதற்கு அந்த ஒரு பைத்தியமாவது மீதமிருக்கிறதே என்று திருப்திப்படவும் இடமிருந்தது. மிஸ்டர் ராவ் இல்லாவிட்டால் காலையில் எழுந்தவுடன் நிலைக் கண்ணாடியில் தம்முடைய உருவத்தையே, திரும்பிப் பார்த்துத் தமக்குத் தாமே குட்மார்னிங் சொல்லிக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்ற பயம் சார்ல்வுட்டுக்கு உண்டு. அதனால்தான் எப்போதாவது வாக்கிங் புறப்படுகிற சமயத்தில் ‘புஜங்கராவ் நிச்சயமாக வாக்கிங் வர மாட்டார்’ என்று தெரிந்திருந்தும் அவரை அழைக்க வருவதுபோல் ஒரு நடை தலையைக் காட்டி விட்டுப் போவார் மிஸ்டர் சார்ல்வுட் ‘வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்த மூன்றாவது நிமிஷத்தில் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, ‘ஐ ஆம் டேக்கிங் லீவ் மிஸ்டர் ராவ்’ என்று புறப்பட்டுவிடுவார் துரை. அதற்கு மேல் அங்கு நிற்கப் பொறுமை இருக்காது அவருக்கு.

‘நான் ஒரே திசையை அலுக்காமல் பார்ப்பதைக் கேலி செய்கிற இந்த வெள்ளைக்காரன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒரே கேள்வியையே அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறானே? - என்று எண்ணிச் சில சமயங்களில் புஜங்கராவ் மனத்துக்குள் சிரித்துக் கொள்வதுமுண்டு. அதுவும் அர்த்தமில்லாத சிரிப்புதான். எப்போதாவது பங்களாவின் முன் கூடத்தில் மாட்டியிருக்கிற லில்லிவோட் ஹவுஸின் புகைப்படம் - அவள் கை நிறைய மலர்க் கொத்துக்களை ஏந்திக்கொண்டு தம்முடன் நிற்கிற மணக்கோலப் படம் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் ஒரு பிரமை உண்டாகும். அப்போது எதிரே உயிரோடு நின்று சிரிக்கிற ஒருவருக்குப் பதில் சிரிப்புச் சிரிப்பது போல அவரும் பதிலுக்கு அர்த்தமில்லாமல் சிரிப்பார்.அவருடைய உதடுகளில் அந்தச் சிரிப்பின் கடைசிச்சுவடு மறைவதற்குள் கண்கள் திரும்பி அந்தச் சிகரத்தை பார்க்கத் தொடங்கிவிடுவது உண்டு.

இப்படியே நாட்களும் வாரங்களும், மாதங்களும், வருடங்களும் கழிந்தன. ஒரு விதமான அர்த்தமின்றிக் கழிந்தன.