பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / அர்த்தம் பிறந்தது 517


நீலகிரியின் திருவிழாப் பருவமாகிய கோடைக்காலம். சித்திரை மாதத்துப் பெளர்ணமி. எமரால்ட் எஸ்டேட் நிலா ஒளியில் பணி படர்ந்த சாம்பல் நிற நீலத்தில் குளித்து மின்னுகிறது. புஜங்கராவ் அந்தச் சிகரத்தைப் பார்த்தபடி பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். சூடாக டீ குடிக்க வேண்டும் போலிருக்கிறது அவருக்கு. வேலைக்காரன் லீவு வாங்கிக் கொண்டு ஊருக்குப் போயிருந்தான். அவனுக்குச் சமீபத்தில்தான் கல்யாணமாகியிருந்தது. சிகரெட் பாக்கெட்டுகளை எல்லாம் தேடிச் சோதனை போட்டாயிற்று. எல்லாம் காலி, தேநீரோ, சிகரெட்டோ, எது வேண்டுமானாலும் ஐந்தாறு மைல் போகவேண்டும். அப்போது நிலா ஒளியில் அந்தச் சிகரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விடவும் அவருக்கு மனமில்லை. சிகரெட்டோ, தேநீரோ குடிக்கவும் ஆசையாயிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பின் புஜங்கராவுக்கு விநோதமானதொரு விருப்பம் உண்டாயிற்று. பதினைந்து வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாகத் தாமே டிரைவ் செய்யக் காரை எடுத்தார் அவர் நிலா ஒளியில் சாம்பல் நீலம் பூத்துக் கிடந்த அந்த மலை வீதியில் காரைச் செலுத்தியபடி தம்முடைய இலட்சிய சிகரத்தைப் பார்த்துக் கொண்டே புறப்பட்டார் அவர். மின் விளக்குகள் புள்ளி புள்ளியாக மின்னுவதிலிருந்து அந்தச் சிகரத்தின் கீழேயும் ஓர் ஊர் இருப்பதை அவரால் அனுமானம் செய்ய முடிந்தது. அவ்வளவு மின்சார விளக்குகள் உள்ள இடத்தில் சிகரெட்டும் தேநீரும் கிடைக்கிற கடை ஒன்றாவது இருக்க வேண்டுமென்பது அவர் எண்ணம். எமரால்டு எஸ்டேட்டிலிருந்து வேறு திசையில் மிகவும் பக்கத்திலேயே ஊர்கள் இருந்தன. ஆனால் அங்கெல்லாம் போக அவருக்கு மனம் இல்லை. அவருடைய நோக்கம் இரண்டு பயன்களைக் கொண்ட ஒரே நோக்கம். கடைக்குப் போக வேண்டும். அந்தச் சிகரத்தையும் பார்த்துக்கொண்டே போக வேண்டும். நிலவைத் தன்னுடைய உச்சி நுனியில் பிடித்துச் சூட்டிக்கொண்டிருப்பதுபோலப் பரிபூரணமான அழகுடன் தெரிகிற அந்தச் சிகரத்தைப் பார்ப்பதிலிருந்து தமக்குச் சொந்தமான காலத்தில் விநாடி நேரம் கூட வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. சிவலிங்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிற பாம்பு மாதிரி மலை ரஸ்தா ஏறியும் இறங்கியும், வளைந்தும், நெளிந்தும் முடிவில்லாமல் போய்க்கொண்டேயிருந்தது. சிகரமும் அருகில் வருவதாயில்லை.

ஒவ்வொரு நாளும் தாம் வழக்கமாகப் பார்க்கிற இடத்திலிருந்து அந்தச் சிகரம் எவ்வளவு தொலைவிலிருக்கிறது என்று புஜங்கராவினால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனாலும் அவர் போகிற வழியிலிருந்து பார்வையில் அது தெரிந்துகொண்டுதான் இருந்தது. அது பார்வையிலிருந்து மறைந்திருந்தால் அந்தக் கணமே அங்கே காரை நிறுத்தி மறுபடியும் அது பார்வைக்குத் தெரிகிற வழியாகக் காரை ஓட்டிக்கொண்டு போயிருப்பார் புஜங்கராவ்.

இரண்டு கைகளும் நிறையப் பல நிற மலர்க் கொத்துக்களை ஏந்திக் கொண்டும் அந்தச் சிகரத்தின் மேலுள்ள நிலாவையே குடையாகப் பிடித்துக்கொண்டும் லில்லிவோட் ஹவுஸ் வந்து அதன் நுனியில் நின்றுகொண்டு சிரிக்கிறாள். அதே