பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

காட்சியை இன்னும் ஒரு கணம் பார்க்க வேண்டுமென்றும் அப்புறமும் முடிவற்ற பல கணங்கள் அதையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் புஜங்கராவ் எல்லையற்றுப் பொங்கும் ஆசையோடு தவிக்கத் தொடங்கிய விநாடியில் சாலை அந்தச் சிகரம் பார்வையிலிருந்தே மறையும்படியானதொரு திருப்பத்தில் திரும்பிவிட்டது.

‘சீ! சீ! இதென்ன அர்த்தமில்லாத பாதை’ என்று சொல்லிலடங்காத வெறுப்போடு கூறிக்கொண்டே புஜங்கராவ் ஸ்டியரிங்கை ஒடித்தார். தாம் அதைச் செய்தது மட்டுமே அவருக்குத் தெரியும்.

னிக் கோயிலான நீலகிரியில் பொழுது புலர்ந்தது. சூரியன் அந்தச் சிகரத்துக்கு மேலேயும் வந்து ‘எமரால்ட்’ என்ற வார்த்தைக்கு நிதரிசனமான அர்த்தத்தை நிரூபணம் செய்து மரகதப்பச்சையை மினுக்கிக் கொண்டிருந்த போது, ‘குட் மார்னிங் மிஸ்டர் ராவ்’ என்று கூறியபடியே வழக்கமாகக் கேட்கிற அடுத்த கேள்வியின் முதற்படியாக ‘வாட் ஆர் யூ.?’ என்று தொடங்கிய சார்ல்வுட் எதிரே காலியாயிருந்த ஈஸிசேரைப் பார்த்துத் திகைத்தார். திகைப்போடு திரும்பி அந்தச் சிகரத்தைப் பார்த்தார். அது அங்கேதான் இருந்தது. எமரால்ட் எஸ்டேட் பங்களாவின் கூர்க்கா ஓடி வந்து தனக்குத் தெரிந்த அறைகுறை ஆங்கிலத்தில், முதலாளி முந்திய நாள் இரவு ஒரு மணிக்குக் காரைத் தாமே டிரைவ் செய்துகொண்டு புறப்பட்டுப் போனபோது தான் மெயின் கேட் கதவுகளைத் திறந்துவிட்டதாகச் சொல்லி, அவர் இதுவரை திரும்பவில்லை என்பதையும் கூறி அவர் சென்ற சாலையின் திசையையும் காண்பித்தான்.

சார்ல்வுட் உடனே அந்தக் கூர்க்காவையும் ஏற்றிக் கொண்டு தம்முடைய ஜீப்பில் அதே சாலையில் விரைந்தார். நீண்ட தொலைவு சென்ற பின்பு சாலை திரும்பி ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கை ஒட்டிக் கீழிறங்கிச் செல்கிற போது ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்தி இறங்கி முகம் கோரமாகி ஆயிரம் கோணலாக வக்கரித்துக் கொள்ளும்படி போக ‘வாட் எ பிட்டி லைப்’ என்று கீழே பார்த்து உச்சூக்கொட்டினார் சார்ல்வுட் மார்ட்டின். அதற்குமேல் அவருக்குச் சொல்ல வரவில்லை. வார்த்தைகளும் கிடைக்கவில்லை. சொல்லியிருந்தாலும் அர்த்தமுள்ள சொற்களாக அப்போது அவருக்குக் கிடைத்திருக்காது.

‘இன்னதென்று அர்த்தம் தெரியாமலே சில உயர்ந்த வார்த்தைகளைக் காதலிப்பது போல் அந்தச் சிகரத்தையும் தாம் காதலிப்பதாக’ எப்போதோ ஒரு சமயம் புஜங்கராவ் கூறியது சார்ல்வுட்டுக்கு நினைவு வந்தது. புஜங்கராவ் காதலித்த அந்த அர்த்தமில்லாக் காதலுக்கு இன்று ஏதோ ஒரு வகையில் அர்த்தம் பிறந்துவிட்டதாகத் தோன்றியது.

ஆனால் அந்த அர்த்தம் பிறந்தபோது அதற்குரியவர் இறந்திருக்க வேண்டாம் என்று எண்ணி அநுதாபப் பட்டார் சார்ல்வுட்

(கல்கி, 11.1.1962)