பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————

அவருடைய திருக்குமாரிக்குச் சதா காலமும் பாரதப் புழையாற்றின் கரையில்தான் மனம் இருந்தது. அவளுடைய தாயார் அவளை அப்படிப் பைத்தியமாய் ஆக்கியிருந்தாள். அந்த வீட்டில் தாயும் மகளுமாகப் போட்டி போட்டுக் கொண்டு செய்கிற காரியம் ஒன்று வாரா வாரம் உண்டு. தபாலில் கிழமை தவறாமல் வந்து சேர்கிற மலையாள வாரப் பத்திரிகை படிக்கிற காரியம்தான் அது.

கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வசந்தா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் கல்லூரியில் கடைசிப் பாட வேளைக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிடுகிற அளவு வெள்ளியன்று மாலைத் தபாலில் வந்து சேர்கிற மலையாள வாரப் பத்திரிகை அவளைக் கிறுக்குப் பிடித்தவளாக ஆக்கியிருந்தது. தாயும், மகளும் படித்து முடித்த பிறகு மூன்றாவது பைத்தியமாகச் செல்வாக்கில்லாத கிறுக்கு ஒன்றும் அந்த வீட்டில் இருந்தது. கொச்சம்மணி என்று பதினாறு பதினேழு வயதில் வேலைக்காரக் குட்டி ஒருத்தி அந்த வீட்டில் இருந்தாள். வீட்டு வேலைக்கும் டாக்டருடைய ஆஸ்பத்திரி வேலைக்கும் சேர்ந்து பயன்படுவதற்காகப் பத்துப் பன்னிரண்டு வயதிலேயே மலையாளத்திலிருந்து வரவழைத்து வைத்துக் கொள்ளப்பட்ட வேலைக்காரி அவள். நானூறு மைல் தொலைவுக்கு அப்பால் வந்தும் மண் அபிமானத்தைவிட முடியாமல் சில அரிய ஆபரேஷன் கேசுகளாக அவரிடம் தேடிவந்து சேரும் நோயாளிகளுக்கு எடுபிடி வேலையாளாகப் பயன்படுகிற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கொச்சம்மணி வீட்டு வேலைக்காரிதான். கொச்சம்மணி என்கிற வேலைக்காரக் குட்டிக்கு இந்த உலகத்தில் ஆடம்பரமான ஆசைகளோ, அந்தரங்கமான அபிலாஷைகளோ எதுவும் கிடையாது. தன்னுடைய உயிருக்கு அடுத்தபடியாகச் ‘சுதாகரன்’ எழுதும் கவிதைகளும் மலையாளக் கதைகளும் அவளுக்குப் பிடிக்கும். வெள்ளிக்கிழமையைத் தவிர இருக்கிற வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் அவள் எதற்காக உயிர் வாழ்கிறாள் என்றால் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து உயிர் வாழ்கிறாள் என்று பகவதி சாட்சியாய்ச் சத்தியம் செய்யலாம். அந்தப் பத்திரிகை அவளுடைய கைக்குக் கிடைக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு மேலாகி விடும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அது தன் கைக்குக் கிடைக்கிற விநாடி எதுவோ அதை அவள் வாழ்த்தியிருக்கிறாள். மகள் கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் பெரியம்மா அந்தப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருப்பார்கள். மகள் திரும்பிய பின் அவளுடைய கைகளிலிருந்து அந்தப் பத்திரிகை விடுதலையடைந்து ஹாலில் உள்ள மேஜைக்கு வந்து சேர்வதற்கு இரவு ஒன்பது மணி ஆகும். அப்புறம் டாக்டர் அதை எடுத்து அலட்சியமாகவும் மேலோட்டமாகவும் ஒரு தரம் புரட்டிப் பார்த்து விட்டு எறிவதற்குக் கால் மணிக் கூறோ அரை மணிக் கூறோ ஆகும். அப்புறம்தான் அந்தப் பத்திரிகையின் உண்மையான இரசிகையின் கைகளுக்கு - அதாவது முதல் வரியிலிருந்து கடைசிப் பக்கத்தின் கடைசி வரி வரை படித்து முடிக்கப்போகிற இரசிகையின் கைகளுக்கு அது போய்ச் சேரும். பத்து வயதுப் பெண்ணாக விற்பனையாகி வந்த அடிமையைப் போல் அவள் அந்த டாக்டர் வீட்டு வேலைக்காரியாகச் சேர்ந்தபின் பாரதப் புழையாற்றின் கரைகளில் உலாவியதில்லை. சுதாகரனின் எழுத்துக்களைப் படிக்கும்போது பல முறை