பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————

முதல் தொகுதி / சத்தியத்தின் பிரதிநிதியாய் 521

மானசீகமாகப் பாரதப் புழையின் கரைகளில் கொச்சம்மணி உலாவியிருக்கிறாள். அதிகாலையில் எழுந்து குச்சு வீட்டின் ஓட்டுச் சார்ப்பில் படர்ந்திருக்கும் மரமல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கூந்தல் முடிப்பில் வைத்துக் கொண்டு பெட்டியும் கையுமாக ஒலவக்கோட்டுக்கு வந்து மல்லிகை நகரத்துக்கு வருவதற்கு முதன் முதலாக இரயிலேறிய நாள் அவளுக்கு நினைவு வருகிற வேளைகளில் சுதாகரனின் கதைகளும் நினைவு வரும். சுதாகரனின் மலையாளக் கதையை அந்த வாரப் பத்திரிகையில் படிக்கிற நேரத்தில் பாரதப் புழை தான் ஓடிக் கொண்டிருக்கிற இடத்திலிருந்து நானூறு மைல்களைக் கடந்து வந்து அந்த நாழிகையில் அவள் மனத்தில் மட்டுமே ஓடும். அது ஒரு விசித்திரமான அனுபவம். அதை உணர்வதற்குத் தான் கொச்சம்மணியால் முடியும். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

சுதாகரனுடைய கதைகளையும், கவிதைகளையும் படிப்பதைத் தவிர அவளுக்கு வேறு ஆசைகளே இல்லையென்று சொன்னேன் அல்லவா? அதற்கு அப்பாலும் அவளுக்கு ஒரே ஓர் ஆசை உண்டு. அதுதான் சுதாகரன் என்கிற அந்தக் கவியுள்ளம் படைத்த கதாசிரியனை நேரிலே எப்போதாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை. அவனுடைய கதைகள் தாய்ப்பாலைப் போல் கொச்சம்மணியின் மனத்துக்கு அவள் பிறந்த நாட்டின் பண்புகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தன.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை வந்த மலையாள வாரப் பத்திரிகையில் சுதாகரன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதையின் தலைப்பே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது அந்தக் கவிதை.

“பாரதப் புழையின் கரையில் குவிந்திருக்கிற மண்ணே! என் கண் பார்வைக்குத் தெரிந்தமட்டில் உனக்கு நிறமில்லை. உனக்கு மணமில்லை. ஆனால் உனக்கு உள்ளே உன்னுடைய கர்ப்பத்தில் ஏதோ விந்தைகள் நிறைந்திருக்கின்றன. இல்லையென்றால் உன் மேல் முளைத்திருக்கும் எல்லையற்ற பூஞ்செடிகளில் இத்தனை நிறங்களில் இத்தனை விதமான மணங்களோடு பூத்திருக்கும் பூக்களுக்கு அவை எப்படிக் கிடைத்தன? ஓகோ! புரிந்தது. அவையெல்லாம் பாரதப் புழை நீரின் பெருமைதான். இந்த நீர்ப் பிரவாகத்தின் வழியே எங்கள் வாழ்க்கையை அழகு செய்யும் மலர்களும், எங்கள் வயிற்றை நிரப்பும் உணவும், எங்கள் பண்பாடுகளும் உருவாகின்றன. நீ பெருகுவதும், குறைவதும், வறண்டு போவதும் எங்களுடைய பருவ காலங்களை மாற்றிமாற்றிப் படைக்கின்றன. உன்னுடைய நீர்ப் பெருக்கில் என்னுடைய மனமும் நினைவுகளும் நித்யமாக நனைந்து கிடக்குமாக! ஒவ்வொரு இந்தியனுடைய உள்ளத்தையும், நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பது போல ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் அவன் எங்கிருந்தாலும் நீநனைத்துக் கொண்டிருக்கிறாய்...!” என்று இப்படிப் பொருளமைந்த அந்தக் கவிதையைப் படித்தபோது கொச்சம்மணியின் மனம் பாரதப் புழையிலும் விழிகள் கண்ணீரிலும் நனைந்தன.