பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


‘எப்போதாவது பெரிய ஆபரேஷனுக்காகத் தேடி வரும் நாட்டுப்புறத்து மலையாளிகளிடம் பேசிப் பழக மொழி தெரிவதன் காரணமாகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் சாப்பாடு துணிமணி தவிர மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்த உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிராவிட்டால் நானும் பாரதப் புழையின் கரையில்தான் திரிந்து கொண்டிருப்பேன். என் உடம்பும் தினம் ஒரு முறையாவது பாரதப் புழையின் நீரில் நனைந்து கொண்டிருக்கும்’ என்று இந்தக் கவிதையைப் படித்தபோது சுதந்திர உணர்ச்சி வசப்பட்டு நினைத்துக் கொண்டாள் கொச்சம்மணி. அப்படி நினைத்தபோது பெட்டியும் கையுமாக வந்து ஒலவக்கோட்டுக்கு இரயிலேறிய நாள் அவளுக்கு நினைவு வந்தது. ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற அந்தக் கவிதையைப் பற்றி வீட்டு எஜமானியம்மாளும் அவளுடைய பெண்ணும் மறு நாள் தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் கொச்சம்மணி தன் இரு செவிகளும் நிறையக் கேட்டாள்.

வசந்தா கெண்டை மீன் புரள்வதுபோல் தன் அழகிய கண்கள் பிறழ முகத்தில் எல்லையற்றுப் பெருகும் உற்சாகம் தென்படத் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்:

“அம்மா! சுதாகரனின் இந்தக் கவிதையைப் படித்தவுடன் ஆகாயத்தைவிட வேகமாகப் பறக்கக் கூடிய நவீன சாதனம் ஒன்றில் ஏறிப் போய் அப்படியே பாரதப் புழையின் கரையில் குதித்துவிட வேண்டும் போல் இருக்கிறது. ‘ஒவ்வொரு இந்தியனுடைய மனத்தையும், நினைவுகளையும், கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் அவன் எங்கிருந்தாலும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று பாடியிருக்கிற வரிகளுக்கு மட்டுமே அட்சர லட்சம் கொடுக்கலாம். எனக்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கிற அதிகாரம் இருந்தால் அதை இந்தச் சுதாகரனுக்குக் கொடுத்து விடுவேன்” என்று கூறும் போது கிளியோபாத்ராவின் மூக்கைப் போல் அற்புதங்களைச் செய்யவல்ல வசந்தாவின் அழகிய கண்களில் ஆர்வம் ஒளி பெருக்கி நின்றது. ஒரு பெரிய கல்லூரியின் ஆயிரத்து இருநூறு மாணவர்களை ஏங்கச் செய்து கொண்டிருக்கும் அந்த அழகிய கண்கள் சுதாகரனுடைய கவிதைக்காகத் தானே ஏங்குவது கண்டு கொச்சம்மணி வியப்படைந்தாள். பிறந்த பூமியிலிருந்து வெளியேறி எங்கெங்கோ பிழைப்புக்காக வாழும் சராசரி மலையாளியின் நினைவில் இருப்த்து நாலு மணி நேரமும் தாய்த் திருநாட்டின் நினைவு இருக்குமா என்பது சந்தேகம்தான். எங்காவது டீக் கடையிலிருந்து தேங்காய் எண்ணெயில் பெரிய பெரிய பொற்காசுகள் புரளுவது போல நேந்திரங்காய் வறுபடுகிற மணத்தினாலும், ஒணம் பண்டிகையின் போதும் எப்போதாவது மைனாரிட்டியினருக்கும் இரசிகத் தன்மை இருக்கலாம் என்ற சலுகையில் ஏதாவது ஒரு தியேட்டரிலே காலை பத்து மணி ஆட்டமாகக் காட்டப்படும் மலையாள சினிமாவைப் பார்க்கும்போதும், ஜன்ம பூமியின் அரசியல், கலை, இலக்கியக் காற்றில் அழுந்தி வரும் ஏதேனும் ஒரு பத்திரிகையைப் படிக்கும்போதும் பிறந்த தேசத்து நினைவுகள் மனத்தைக் கவ்விக்கொண்டு குமையச்