பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————

முதல் தொகுதி / சத்தியத்தின் பிரதிநிதியாய் 523

செய்வது உண்டுதான். கொச்சம்மணி அப்படிப் பலமுறை மனம் குமைந்திருக்கிறாள். அதிகாலையில் எழுந்து நீராடிக் குச்சு வீட்டின் ஓட்டுச் சார்பில் படர்ந்து குண்டு குண்டாகப் பூத்திருந்த மல்லிகைப் பூக்களைத் தொடுத்து ஈரமும் தேங்காய் எண்ணெய் பூசிய பளபளப்புமாகக் கருப்பு ‘வெல்வெட்’டைப் போல் வழுக்கிய நீண்ட கூந்தல் முடிப்பில் செருகிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒலவக்கோட்டுக்கு வந்து இரயிலேறிய வேளையை நினைக்கும் போது கொச்சம்மணி தன் மனத்துக்குள்ளேயே அழுதிருக்கிறாள். பல முறை அப்படி அழுதிருக்கிறாள். படித்த மலையாளியான டாக்டர் சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ்.அவர்களை விடக் கொச்சம்மணியின் நாட்டுப் பற்று அதிகமாக இருந்தது. டாக்டர் சிவசங்கரன் மலையாளப் பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கிறார். டாக்டர் சிவசங்கரனுடைய மனைவி மலையாளப் பத்திரிகையில் வருகிற கதைகளையும், கவிதைகளையும் படிக்கிறாள். சிவசங்கரனுடைய மகள் பிறப்பிலிருந்தே தமிழ்நாட்டில் வளர்ந்தும், சுதாகரனுடைய கவிதைக்காக ஏங்குகிறாள்.

ஆனால், கொச்சம்மணியைப்போல் சதா காலமும் அந்த உணர்விலேயே நனைந்து கொண்டிருக்க அவர்களால் முடியவில்லை. டாக்டர், அவர் மனைவி, மகள் இவர்களைப் போலக் கொச்சம்மணிக்கு ஆங்கிலம் தெரியாது. அதே போலக் கொச்சம்மணிக்குத் தெரிந்த பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது. கொச்சம்மணிக்கு மகாகவி வள்ளத்தோவின் ‘சித்திர யோகமும்’ ’பால சீதை’யும் நன்றாகத் தெரியும். அவருடைய சாகித்ய மஞ்சரியில் பல பாடல்களை அவள் மனப்பாடம் பண்ணியிருக்கிறாள். குஞ்சுக் குட்டன் தம்பிரானுடைய பாரதத்திலும், குமாரனாசானுடைய ‘வீணபூவு’விலும்கூட அவளுக்குப் பரிச்சயம் உண்டு. டாக்டர் சிவசங்கரனுடைய மகள் வசந்தாவோ இவற்றின் பேர்களைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டாள்.

டாக்டரின் மகள் இணையில்லாத பேரழகியாக இருக்கலாம். ஆனால், நாட்டுப்பற்றிலும் மொழி அபிமானத்திலும் அவள் தன்னோடு போட்டிபோட முடியாது என்று எண்ணிக் கொச்சம்மணி பல முறை தனக்குள் அந்தரங்கமாகக் கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.அந்த வீட்டில் அவள் மட்டும் படமுடிந்த கர்வமாக இது ஒன்றுதான் மீதம் இருந்தது.

முதன் முதலாக வசந்தா சுதாகரனுடைய கவிதையைத் தன் தாயிடம் புகழ்ந்ததைக் கேட்டபோதுதான் கொச்சம்மணி தன்னுடைய கர்வத்துக்கும் போட்டி இருப்பதாக ஓரளவு புரிந்துகொண்டாள்.

இதற்கடுத்த மறுவெள்ளிக்கிழமை ஓர் அதிசயம் நடந்தது. பங்களாவின் கீழ்ப்பகுதி முழுவதும் நோயாளிகளின் படுக்கையோடு கூடிய அறைகளாகத் தடுக்கப்பட்டு ஆசுபத்திரியாகவும், மாடி முழுதும் குடியிருப்புக்காகவும் அமைந்திருந்தது. இதனால் ஆசுபத்திரி வேலை உள்ள நாட்களில் கொச்சம்மணி கீழேயும் மற்ற நாட்களில் மாடியிலும் இருப்பாள். தமிழோ ஆங்கிலமோ சிறிதும் பேசத் தெரியாத அப்பட்டமான மலையாளி ‘பேஷண்ட்ஸ்’ யாராவது வந்தால்தான் அவளுடைய ‘சர்வீஸ்’ கீழே தேவைப்படும். அன்று அப்படிப்பட்ட ‘சர்வீஸ்’ எதுவும்