பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————

முதல் தொகுதி / சத்தியத்தின் பிரதிநிதியாய் 527


“உங்கள் கவிதைகளுக்கு... பத்திரிகையில் என்ன கொடுக்கிறார்கள்?”

“சில பேரிடமிருந்து இப்படிக் கேள்விகளை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கியத்தைத் தவிர வேறு ஒன்றும் கொடுப்பதில்லை” என்று சுதாகரனிடமிருந்து சுடச் சுடப் பதில் வந்தது.

“நீங்கள் எங்கள் கல்லூரியில் ஒரு நாள் வந்து பேசுங்களேன்.”

“செளகரியப்படாது! இதுமாதிரி அசட்டுக் கேள்விகளையெல்லாம் உங்களைப் போலவே இன்னும் ஆயிரம் பேர்கள் கேட்க ஒரு வாய்ப்புத் தர எனக்கு விருப்பமில்லை.”

“நீங்கள் முன்கோபக்காரராக இருக்கிறீர்கள். இப்படி இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறிக்கொண்டே விருட்டென்று எழுந்திருந்து வெளியேறிப் போய்விட்டாள் வசந்தா.

அவள் தலை மறைந்ததும், பயந்து நடுங்கிக் கொண்டே பேதைத் தன்மையின் பிரதிநிதியாய்க் கதவோரம் நின்று கொண்டிருந்த கொச்சம்மணியை நோக்கிச் சுதாகரன் சிரித்தான். பின்பு பேசினான்:

“டாக்டர் தன்னுடைய ‘பேஷண்டு’களை விசாரிக்கிற மாதிரியே மகளும் விசாரித்ததைக் கவனித்தீர்களா?”

“பாவம்: வசந்தாவுக்கு நாகரிகம் தெரியாது. அசட்டுப் பிசட்டென்று ஏதோ கேட்டுவிட்டாள். அதற்காக நீங்கள் இவ்வளவு சூடாகப் பதில் சொல்லியிருக்கவேண்டாம்.”

“இதைவிடச் சூடாகப் பதில் சொல்ல முடியாமற் போயிற்றே என்றுதான் எனக்கு வருத்தம். பிரம்மாவுக்கு முன்னால் போய்ப் படைப்புத் தொழிலைச் செய்வதற்கு நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று கேட்பது உண்டோ? அல்லது அந்தத் தொழிலுக்கு நீ என்ன சம்பளம் பெறுகிறாய் என்று கேட்பதுண்டோ? சில பேர் இப்படி எல்லாம் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட அசட்டுக் கேள்விகளைச் சந்திக்கும் விநாடிகளில் எங்களுடைய கண்களுக்கு முன்னால் எல்லாமே இருண்டு போகிறது. எங்களுடைய எண்ணங்களின் உயரத்திலிருந்து நாங்கள் கீழே உருண்டு விடுகிறோம். இந்த வேதனை புரியாமல் சிலர் திரும்பத் திரும்பக் கேள்வி அம்புகளால் எங்களைப் புண்ணாக்கி விடுகிறார்கள். எந்தக் குரல் சத்தியத்தை ஒலிக்க விரும்புகிறதோ அது இப்படிப்பட்ட எதிரொலிகளை வெறுக்கிறது.”

“தப்புத்தான்! அவள் அசட்டுத்தனமாகக் கேட்டுவிட்டாள்.”

பெண்ணே! எங்கள் பரம்பரை தன்னுடைய முதல் இரசிகனைச் சந்தித்த நாளிலிருந்து இந்த விநாடி வரை தெரிந்து கொள்ளத் தவிக்கிற விஷயம் இதுதான். எதிரே வந்து வாய் நிறையப் புகழ்ந்து கொண்டு நிற்கிறவர்களுடைய குரல்களிலிருந்து எந்தக் குரல் சத்தியமயமாகப் பிறந்து சத்தியத்தின் பிரதிநிதியாய் ஒலிக்கிற குரல் என்று