பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70. இரவல் ஹீரோ

ன்னாசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நேர்ந்து விட்டது? என்னவாவது? அது ரொம்பப் பெரிய விஷயம் சார்! ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம். மனிதனுடைய வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து இருக்கலாம். ஆனால் எல்லா நாட்களுமே அப்படி இருந்து விடுவதில்லை. ஒரு நாள் - ஏதோ ஒரே ஒரு நாள் அவன் மகிழ்வதற்காகவே வந்து நேர்கிறது என்பதை நிச்சயமாய் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இந்த விநாடியில் அப்படி நம்பினான் சன்னாசி, அவனைப் போன்றவனைத் தேடி வருகிற சாதாரண அதிர்ஷ்டமா அது?

காலையில் எழுந்திருந்து, முதல் நாள் இரவு நினைவாகப் பாதியில் அணைத்துக் காதில் சொருகிக் கொண்டிருந்த அரைக் கட்டைப் பீடியை நாலு தம் உறிஞ்சிவிட்டுத் தெருச் சாக்கடைகளின் பிரவாகத்தில் நனைந்து, நனைந்து நாற்றத்தைத் தவிர வேறு குணங்களைக் கண்டறியாத அந்தக் காக்கி டிராயரை எடுத்து மாட்டிக் கொண்டு, ‘எதற்காகப் பொழுது விடிந்தது?’ என்ற அலட்சியத்தோடு அவன் சேரியிலிருந்து ‘உத்தியோகத்’துக்குப் புறப்பட்ட போது கூட இப்படி ஒர் அதிர்ஷ்டத்தைத் தன் வழியில் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவில்லையாவது? சொப்பனத்தில் கூட இப்படியும் ஒன்று நடக்கும் என்று அவன் கண்டதில்லை. கற்பித்துப் பார்த்துக் கொண்டதுமில்லை. .

சன்னாசியின் உத்யோகம் இருக்கிறதே; அது இசக்கிமுத்து மேஸ்திரியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. சாக்கடையை விட அதிகமாக நாறக் கூடிய மனத்தை இசக்கி முத்து மேஸ்திரி என்கிற மனிதர் பெற்றிருந்தும், சன்னாசிப் பயல் அவருடைய டிவிஷனில் உள்ள இரண்டு மெயின் ரோடுகளைச் சுத்தம் செய்ய முடிந்தது போல அவர் மனத்தைச் சுத்தம் செய்ய முடிந்ததில்லை. என்ன செய்யலாம்? அதற்கென்று யாரும் கார்ப்பொரேஷன் வைத்து நடத்தவில்லையே? அப்படி நடத்தினாலும் அது முடிகிற காரியம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். வட்டம் வட்டமாகத் தெருவில் இரும்புத் தகடுகள் இட்டு மூடியிருக்கும் பாதாளச் சாக்கடைக் குழிகளில் இறங்கி இந்த உலகத்தின் அழுக்குகள், ஓடாமல் தேங்கி விடாதபடி ஒழுங்கு செய்வது போல் இசக்கிமுத்து மேஸ்திரியின் மனத்தில் உள்ள அழுக்குகளை அவனால் போக்கி விட முடியாதுதான். -

“மேஸ்திரி ரொம்பத் தொந்தரவு புடிச்ச மனுஷனுங்க.எங்க சம்பளத்திலே லஞ்சம். தோட்டிப் பொம்பளைகளிடத்தில் எத்தினி எத்தினியோ வம்பு.அத்தெ என் வாயாலே சொல்லப் படாது ஸாமி. இந்தப் பட்டணத்திலே நெஜமா ஓடற சாக்கடை இந்த மேஸ்திரியோட மனசுதான்” என்று எப்பொழுதாவது சானிடரி இன்ஸ்பெக்டர்
நா.பா. I - 34